கோலாலம்பூர்: ஈரானில் தொடரும் பூசலால் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களின் எண்ணிக்கை 641க்குக் குறைந்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியர்களை அங்கிருந்து மீட்கும் பணிகள் கட்டங்கட்டமாக நடைபெற்றுவருவதாக அமைச்சு குறிப்பிட்டது.
மலேசியத் தூதரகம் தொடர்புகொண்ட மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதையும் அமைச்சு உறுதிசெய்தது. அவர்களில் மலேசிய ராணுவப் படை அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள், லெபனானில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் இடைக்காலப் படையில் சேவையாற்றினர்.
மத்திய கிழக்கின் வெவ்வேறு வட்டாரங்களில் உள்ள மலேசியத் தூதரகங்கள் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொண்டுவருகின்றன.
போரால் சிக்கியுள்ள மலேசியர்களைத் தாய்நாட்டுக்குத் திரும்ப அழைத்துவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சு சொன்னது.
ஜெடாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் மலேசிய யாத்திரிகளின் பயண ஏற்பாடுகளைக் கவனிக்கிறது.
துபாயிலிருந்து கோலாலம்பூருக்கான பயணச்சீட்டுகளை எமிரேட்ஸ் விமான நிறுவனம் மீண்டும் விற்கத் தொடங்கியுள்ளது.
எட்டிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் மார்ச் 6ஆம் தேதியிலிருந்து மார்ச் 19ஆம் தேதிவரை கோலாலம்பூருக்குச் சேவை வழங்க முன்வந்துள்ளது.

