பெர்லின்: ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் உள்ள இடம்பெயர்வு குறித்த ஆய்வு, பகுப்பாய்வு மையம் புதன்கிழமை (ஏப்ரல் 22) வெளியிட்ட அறிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முன்னில்லாத அளவுக்கு 2025ஆம் ஆண்டில் 64.2 மில்லியனை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ஏறத்தாழ 2.1 மில்லியன் அதிகமாகும்.
யூரோஸ்டாட், ஐநா அகதிகள் பிரிவு ஆகியவற்றின் தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த எண்ணிக்கை 2010ஆம் ஆண்டில் 40 மில்லியனாக இருந்தது என அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஏறத்தாழ 18 மில்லியன் பேருடன் வெளிநாட்டில் பிறந்தவர்களை அதிகளவில் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாக ஜெர்மனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இவர்களில் 72% பேர் வேலை செய்யும் வயதுடையவர்கள். அதே வேளையில், ஸ்பெயின் அண்மையில் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது. அங்கு சுமார் 700,000 பேர் கூடுதலாகச் சேர்ந்ததால், வெளிநாட்டில் பிறந்தவர்களின் மக்கள் தொகை 9.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் இடம்பெயர்வு முறைகள் சீரற்றதாக இருப்பதாகவும் லக்சம்பர்க், மால்ட்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகள் தங்களது மக்கள் தொகையளவுக்கு ஏற்ப அதிக அளவிலான புலம்பெயர்ந்தோரைக் கொண்டுள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
தஞ்சம் கோரும் விண்ணப்பங்களும் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே குவிந்துள்ளன. ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் மொத்த விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பங்கைக் கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 2.7 மில்லியன் அகதிகளுடன், அதிக எண்ணிக்கையிலான அகதிகளுக்கு இடமளித்த நாடாக ஜெர்மனி விளங்குகிறது.

