ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை சரிவு

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களின் எண்ணிக்கை சரிவு

2 mins read
4fb8687a-1bfd-439e-a230-f7f6d229b85a
ஈரானின் தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த துறைமுகத்தில் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

சிங்கப்பூர்: எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்காவும் ஈரானும் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த 10 நாள்களில் தினமும் சராசரியாக 10 சரக்குக் கப்பல்களே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துள்ளன.

இது, கடந்த மே மாதத்திற்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த எண்ணிக்கை என திங்கட்கிழமை (செப்டம்பர் 7) வெளியிடப்பட்ட கப்பல் போக்குவரத்துத் தரவுகள் குறிப்பிட்டன.

கப்பல் போக்குவரத்தின் பத்து நாள் சராசரி எண்ணிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) 15ஆகவும் அதற்கு மறுநாள் 13ஆகவும் பதிவான நிலையில், ஞாயிற்றுக்கிழமை அது 10க்குக் குறைந்தது.

கெப்லர் என்னும் பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகள் இதனைத் தெரிவித்தன.

கடந்த சனிக்கிழமை இரண்டு கப்பல்கள் மட்டுமே அந்த நீரிணையைக் கடந்து சென்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கை ஆறு ஆனது. அவை பெரும்பாலும் ஈரானியப் பாதையையே பயன்படுத்தின.

அந்தப் பகுதியில் உள்ள தனது போர்க்கப்பல்கள் மீது ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதல்களுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்தது.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே நடந்த தாக்குதல் உட்பட, மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 5) தனது படைகள் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது.

அந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை, மூன்று அமெரிக்கக் கப்பல்களையும் அனுமதிக்கப்படாத பாதைகளில் சென்ற மூன்று எண்ணெய்க் கப்பல்களையும் குறிவைத்து செயல்பட்டதாகக் கூறியது.

சனிக்கிழமை நடந்த அந்தத் தாக்குதல்கள், கடல்துறை மோதலின் தீவிரத்தை உணர்த்தியதாக கடல்துறை உளவு நிறுவனமான மாரிஸ்க்ஸ் கூறியது.

“அமெரிக்கா-ஈரான் என இருதரப்பிலும் பொருளியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் கருவிகளாக வணிகக் கப்பல்கள் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன,” என்று அது மேலும் கூறியது.

இந்நிலையில், ஜூலை 6ஆம் தேதி முதல், ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்று வந்த கப்பல்கள் மீது 27 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பிரிட்டனின் கடல்துறை வர்த்தகச் செயல்பாட்டு அமைப்பு தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஹோர்முஸ் நீரிணைகப்பல்போக்குவரத்து