கோலாலம்பூர்: மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியிலிருந்து (பிகேஆர்) நூருல் இஸா அன்வார் விலகியது கட்சிமீதுள்ள அவரின் கடப்பாட்டைப் பாதிக்காது என்று தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறியுள்ளார்.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகளான நூருல், மேற்கல்விக்காகக் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.
ஆனால், அவர் தொடர்ந்து கட்சியின் உறுப்பினராக இருப்பார் என்றும் கட்சியின் இக்கட்டான சூழ்நிலைகளில் கைகொடுப்பார் என்றும் திரு ஃபாமி வலியுறுத்தினார்.
“பிரதமர் அன்வாருக்கு இறுதிவரை ஆதரவு தெரிவிப்பதில்தான் நாடாளுமன்றம் கவனம் செலுத்துகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களும் அதில் உறுதியாக உள்ளனர்,” என்றார் ஃபாமி.
முனைவர் பட்டத்தில் கவனம் செலுத்துவதற்கான நேரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நூருல் இஸா, பதவியிலிருந்து விலகிக்கொண்டார். கட்சியின் தலைமைத்துவப் பொறுப்புகள் தற்போதுள்ள தலைமைத்துவக் கட்டமைப்பின்கீழ் தொடரும் என்றார் அவர்.
நூருல் இஸாவின் பதவி விலகலால் அரசாங்கம் ஆதரவை இழந்துவருவதாகக் கருதக்கூடாது என்று ஃபாமி சொன்னார்.
மக்களின், பொருளியலின் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் முக்கியக் குறிக்கோள் என்ற அவர், மக்களின் பொருளியல்மீதுதான் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றார்.
அரசாங்கம் தொடர்ந்து பல சீர்திருத்தங்களை அமல்படுத்தும் என்றும் கூடிய விரைவில் பிரதமர் அன்வார் மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான சில நல்ல அறிவிப்புகளை முன்வைப்பார் என்றும் நம்புவதாகச் சொன்னார்.


