சான் ஃபிரான்சிஸ்கோ: மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நான்கு தென்கிழக்காசிய நாடுகளுக்குத் தனது சில்லுகள் அடங்கிய சேவையகங்களை (servers) அனுப்புவதை நிறுத்துமாறு உற்பத்திப் பங்காளிகளுக்கு என்விடியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தி வியாழக்கிழமை (நவம்பர் 26) தெரிவித்தது.
சீன நிறுவனங்கள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சில்லுகளைப் பெற பயன்படுத்துவதாகக் கருதப்படும் வழித்தடங்களை அடைக்கும் அமெரிக்காவின் முயற்சியாக, தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சில்லுகளை ஏற்றுமதி செய்ய உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
என்விடியா சில்லுகளைச் சேவையகங்களில் பொருத்தும் டெல், சூப்பர்மைக்ரோ போன்ற நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் கொள்முதல் ஆணைகளை அனுப்ப என்விடியா அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளன. இவ்விவகாரம் அறிந்த மூவரை மேற்கோள் காட்டி ஃபைனான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்தத் தடை தற்காலிகமானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
சீனச் சில்லு வடிவமைப்பாளர்கள் தனிப்பட்ட ஏற்றுமதி உரிமங்களின்றி மேம்பட்ட உற்பத்திச் சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் புதிய விதியை அமெரிக்க வர்த்தக அமைச்சு நவம்பரில் செயல்படுத்தியது. சீனாவுக்கு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுச் சில்லுகள் கிடைப்பதைக் கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தரவு நிலையங்கள், சில்லுக் கடத்தல் பாதைகளை ஒடுக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயிற்றுவிக்க சீன நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கணினித் திறனைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட்’ (Megaspeed) எனும் மேகக் கணினி நிறுவனத்தில் முன்பு பணியாற்றிய சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, என்விடியா தலைமை நிர்வாகி ஜென்சன் ஹுவாங் பதவி விலகிய சில நாள்களில் அமெரிக்க வர்த்தக அமைச்சு இப்புதிய விதியை வெளியிட்டது. பின்னர், நவம்பர் 23ஆம் தேதி என்விடியா நிர்வாகக் குழு அவரை மீண்டும் தலைமை நிர்வாகியாக நியமித்தது.
தனது தரவு மையங்களில் கணினித் திறனை வாடகைக்கு விடும் என்விடியா பங்காளியான மெகாஸ்பீட் நிறுவனம், அதிநவீன ஏஐ சில்லுகளைச் சீனாவிற்குச் சட்டவிரோதமாகத் திசைதிருப்பியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
