கலிஃபோர்னியா: உலகின் ஆக மதிப்புமிக்க நிறுவனம் எனும் சிறப்பை ‘ஆப்பிள்’ நிறுவனத்திடமிருந்து தட்டிப் பறித்தது ‘என்விடியா’ (NVIDIA).
அந்நிறுவனத்தின் நவீன செயற்கை நுண்ணறிவுக் கணினிச் சில்லுகளுக்கான தேவை பெரிதும் கூடியுள்ளதை அடுத்து, அதனுடைய பங்கு விலைகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) சாதனை அளவு ஏற்றம் கண்டன.
என்விடியா பங்கு விலை 2.2 விழுக்காடு கூடியதை அடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.53 டிரில்லியன் அமெரிக்க டாலராக (S$4.66 டிரில்லியன்) உயர்ந்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.52 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
கடந்த ஜூன் மாதத்திலும் உலகின் ஆக மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் என்விடியா முதலிடத்திற்கு முன்னேறியது. ஆயினும், அந்நிலை குறுகிய காலத்திற்கே நீடித்தது. மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் நிறுவனங்களின் மதிப்பு அதனை விஞ்சியது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 3.20 டிரில்லியன் டாலராக இருக்கிறது.
இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் என்விடியா பங்கு விலை ஏறக்குறைய 18 விழுக்காடு உயர்ந்துள்ளது.

