கோலாலம்பூர்: மலேசியாவின் தாமான்சராவில் உள்ள ஒரு வணிக மையத்தின் 14வது மாடியிலிருந்து 11வது மாடியில் விழுந்து நியூசிலாந்து ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.
குடிநுழைவுச் சோதனையிலிருந்து தப்ப முயன்றபோது இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (21-02-2023) நிகழ்ந்தது.
தண்ணீர்த் தொட்டி அமைந்துள்ள 11வது மாடியின் கூரைப் பகுதியில் அந்த 36 வயது ஆடவர் விழுந்தார். அதில், அவரது கையிலும் இடுப்பு எலும்பிலும் காயமேற்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"அவசர உதவி கோரி மாலை 5.15 மணிக்கு எங்களுக்குத் தகவல் கிடைத்தது. 16 நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டோம். காயமடைந்த ஆடவர் தூக்குப் படுக்கைமூலம் கொண்டுவரப்பட்டு, செம்பிறைக் குழுவினர் அவருக்குச் சிகிச்சை அளித்தனர்," என்று அந்த அதிகாரி விளக்கமாகக் கூறினார்.


