லண்டன்: மாணவர்கள், இளம்பருவத்தினரிடையே எடை குறைவாக இருப்பதைவிட உடற்பருமனே பெரும்பிரச்சினையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதி (யுனிஃசெப்) தெரிவித்துள்ளது.
உலகளவில் காணப்படும் ஆரோக்கியமற்ற உணவுச் சூழலே காரணம் என்று அந்த அமைப்பு குற்றம் சாட்டியது.
உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களால் தொகுக்கப்பட்ட 2000 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில் யுனிஃசெப் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் இந்தப் பிரச்சினை குறித்து அது எச்சரித்திருந்தது.
கடந்த 2010 முதல் உள்ள போக்குகளின் அடிப்படையில், 2022 முதல் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தரவுகளைக் கொண்டு யுனிஃசெப் விவரித்துள்ளது.
அந்த அமைப்பின் அளவுகோலின்படி பத்தில் ஒருவர் அல்லது கிட்டத்தட்ட 188 மில்லியன் பள்ளி செல்லும் பிள்ளைகளும் இளவயதினரும் பருமனாக உள்ளனர்.
இதனால் நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட வாழ்நாள் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்து உள்ளது என்று அது தெரிவித்தது.
ஐந்து முதல் 19 வயது வரை உள்ளவர்களின் உடற்பருமன் விகிதம் மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இது 2000ஆம் ஆண்டின் 3 விழுக்காட்டிலிருந்து 2022ல் 9.4 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 13 விழுக்காடாக இருந்த குறைந்த எடைப் பிரச்சினை 2022ல் 9.2 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எடை குறைவாக இருப்பதும் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளதையும் அறிக்கை சுட்டியது.
“ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பற்றிப் பேசும்போது, எடை குறைவான குழந்தைகளைப் பற்றி மட்டுமே பேசுவதில்லை,” என்று யுனிஃசெப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸல் கூறினார்.
சகாரா, தெற்காசியா தவிர்த்து உலகின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த எடைப் பிரச்சினையைவிட உடற்பருமன் பிரச்சினை தற்போது அதிகமாக உள்ளதாக யுனிஃசெப் குறிப்பிட்டது.
உலகளவில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நியூவே, குக் தீவுகள் போன்ற சில பசிபிக் தீவு நாடுகளில் ஐந்து முதல் 19 வயது வரையிலானோரில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினருக்கு உடற்பருமன் பிரச்சினை உள்ளது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் மற்றும் அமெரிக்காவில் அந்த விகிதம் 21விழுக்காடாக உள்ளது.
அமெரிக்கா போன்ற சில நாடுகளில், பதின்ம வயதினருக்காக அண்மையில் உருவாக்கப்பட்ட எடை இழப்பு மருந்துகளை மருத்துவர்கள் இப்போது மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகம் உள்ள, பேரளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற பொருள்கள் எங்கும் விற்பனை செய்யப்படுவது ஆகியவை உடற்பருமன் அதிகரிப்புக்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளது என்றது யுனிஃசெப்.
யுனிஃசெப் ஆய்வில் பங்கேற்ற 170 நாடுகளைச் சேர்ந்த 13 முதல் 24 வயதுடைய 64,000 இளையர்களில், 75 விழுக்காட்டினர் கடந்த வாரத்தில் இனிப்பான பானங்கள், தின்பண்டங்கள் அல்லது விரைவுணவு ஆகியவற்றுக்கான விளம்பரங்களைப் பார்த்ததாகத் தெரிவித்தனர்.
போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் கூட 68% இளையர்கள் இந்த வகை விளம்பரங்களைப் பார்த்ததாகக் கூறினர்.
பள்ளிகளில் நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்வதற்கான கட்டுப்பாடுகள், தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை உலகளவில் அரசாங்கங்கள் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என்று யுனிஃசெப் வலியுறுத்தியுள்ளது.

