லண்டன்: பிரிட்டனுக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் புதன்கிழமை (பிப்ரவரி 25) முதல் மின்னிலக்க பயண அனுமதிப் படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகின் 85 நாடுகளுக்கு அந்த உத்தரவு பொருந்தும் என்றும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனுக்குள் நுழைவதற்கு முன்னரே மின்னிலக்கப் பயண அனுமதியை (ETA) பயணிகள் சமர்ப்பித்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைய முடியாது.
பயண அனுமதியை இணையம் மூலம் விண்ணப்பித்துப் பெற £16 (S$27) கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த மின்னிலக்கப் பயண அனுமதி முறையை பிரிட்டன் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. பின்னர், 2025 ஏப்ரலில் ஐரோப்பியப் பயணிகளுக்கு அதனை அது விரிவுசெய்தது.
இருந்தபோதிலும், அந்த நடைமுறையைப் பிரிட்டன் கடுமையாகப் பின்பற்றவில்லை.
ஆனால், புதன்கிழமை (பிப்ரவரி 25) முதல் பயண அனுமதி முறையை எல்லாப் பயணிகளுக்கும் அது கட்டாயமாக்கி உள்ளது.
மின்னிலக்க வருகை அனுமதியை, பயணம் செய்யும் விமான நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். அதனைச் சரிபார்த்த பின்னரே விமானத்திற்குள் நுழைய அந்நிறுவன அதிகாரிகள் அனுமதி வழங்குவர்.
தொடர்புடைய செய்திகள்
அயர்லாந்து குடிமக்களும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளோரும் இந்த மின்னிலக்க பயண அனுமதியைப் பெறத் தேவை இல்லை என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
பிரிட்டனின் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த பயண அனுமதி முறைத் திட்டம் அவசியமானது என்று குடிநுழைவு அமைச்சர் மைக் டேப் குறிப்பிட்டுள்ளார்.

