கோலாலம்பூர்: பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த மாதம் 28ஆம் தேதி மலேசிய ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது அவரிடம் துப்பாக்கி இருந்தது.
இந்நிலையில், அதிகாரியின் கைது குறித்து மேல் விவரங்களை மலேசிய ராணுவம் வெளியிட்டுள்ளது.
“ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துத் துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் இருப்புக் கணக்கில் சரியாக உள்ளன,” என மலேசிய ராணுவத் தலைமையகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு உறுதிப்படுத்தியது.
அதிகாரி துப்பாக்கியுடன் கைதான சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் ராணுவ ஆயுதக் கிடங்குகளில் உடனடியாகச் சோதனைகள் நடத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கைதான அதிகாரியிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், அந்த அதிகாரியிடம் துப்பாக்கித் தோட்டாக்கள், தடைசெய்யப்பட்ட பொருள் என்று சந்தேகிக்கப்படும் திரவம் ஆகியவை இருந்தன.
அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்டச் சிறுநீர் பரிசோதனையில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் ஒன்று உடலில் கலந்திருப்பது உறுதியாகியுள்ளது.
எனினும், ஆய்வகப் பரிசோதனைக்குப் பிறகே அந்த முடிவு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் விதிமீறல் உறுதியானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு ராணுவம் தனது முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இதற்கிடையே உண்மையை முழுமையாக அறியாமல் பொது மக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
