சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு யூனைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளை அவரது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
வீட்டிற்குள் செல்ல அதிகாரிகளை அவர்கள் கடைசி வரை அனுமதிக்கவில்லை.
இதனால் அதிபர் யூன்னைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பினர்.
குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலைக் கைது செய்ய அந்நாட்டின் ஊழல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஜனவரி 3ஆம் தேதியன்று அவரது வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது அதிபர் யூனின் வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.
“அதிபர் யூனை உயிர் கொடுத்து காப்போம்,” என்று கூடியிருந்த ஆதரவாளர்களில் ஒருவர் உரக்கக் கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதிபர் யூன் மக்களால் பாதுகாக்கப்படுவார் என்று அங்கு கூடியிருந்தோர் முழக்கமிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களைக் கடந்து சென்ற அதிகாரிகள் அதிபர் யூனின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்தனர்.
ஆனால் அதிபரின் பாதுகாப்புப் படையினர் அதிகாரிகளை எதிர்கொண்டு அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதற்கு முன்பு தேடுதல் உத்தரவு ஆவணத்துடன் அதிபர் யூனின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது அவர்களை உள்ளே அனுமதிக்க அதிபர் பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர்.
டிசம்பர் 3ஆம் தேதியன்று தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயற்சி செய்ததற்காகத் திரு யூன்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அவர் கைது செய்யப்பட்டால் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்படும் முதல் தென்கொரிய அதிபராக அவர் அறியப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் யூனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள கைது ஆணை ஜனவரி 6ஆம் தேதி வரை செல்லுப்படியானதாக இருக்கும்.
கைது செய்யப்பட்டதும் அவரை 48 மணி நேரத்துக்கு மட்டுமே அதிகாரிகள் தடுத்து வைத்திருக்க முடியும்.
அதன் பிறகு, அவரை தடுப்புக் காவலில் வைத்திருக்க விண்ணப்பம் செய்ய வேண்டும் அல்லது அவரை விடுவிக்க வேண்டும்.
இந்நிலையில், அதிகாரிகளுடன் அதிபர் யூன் ஒத்துழைக்காதது ஏமாற்றமளிப்பதாக ஊழல் புலனாய்வுத்துறை கூறியது.
அதிபர் யூனின் வீட்டிற்குள் செல்ல முடியாதபடி அவரது பாதுகாப்புப் படை தடுப்புகளைப் போட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தனது அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருதி கைது நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஊழல் புலனாய்வுறுத்துறை கூறியது.