கோலாலம்பூர்: அடையாள ஆவண மோசடிகளைத் தடுக்கும் நோக்கில், 94 நவீனப் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய மலேசிய அனைத்துலகக் கடப்பிதழை அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 30) நாடாளுமன்ற வளாகத்தில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்த இருக்கிறார்.
நாட்டின் அடையாள ஆவணங்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மலேசிய அரசாங்கம் எடுத்து வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது புழக்கத்திலுள்ள மலேசியக் கடப்பிதழில் 49 பாதுகாப்பு அம்சங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய பதிப்பில் அவை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு, போலி ஆவணங்களைத் தயாரிக்க முடியாதவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
புதிய கடப்பிதழில் முப்பரிமாணப் படிவங்கள், புற ஊதாக் கதிர்வீச்சு அச்சு முறை, மறைந்திருக்கும் காட்சி வடிவங்கள் மற்றும் தடயவியல் சார்ந்த சிறப்புப் பாதுகாப்பு நுட்பங்கள் போன்ற அதிநவீன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆவணத்தின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், கடப்பிதழைத் தைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நூலிழையிலும் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதே வேளையில், கடவுச்சீட்டின் ஒவ்வொரு பக்கமும் தனித்துவமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தரவுப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காக, புதிய வடிவமைப்பிலான கடவுச்சீட்டுகள் மற்றும் புதிய ‘மைகாட்’ அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இவ்வாண்டின் தொடக்கத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடப்பிதழ் குறியீடு தரவரிசையின்படி, மலேசியக் கடவுச்சீட்டு உலகளவில் மூன்றாவது மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக 2025ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது.

