தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எண்ணெய் மீதான தடை; உக்ரேனை தாக்கியது ரஷ்யா

1 mins read
871614d3-3700-4a2f-b1ff-679693b503a1
அக்டோபர் 25ல் கீவில் நேர்ந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதம். - படம்: ஏஎஃப்பி

கீவ்: ரஷ்யாவின் ஏவுகணைகளும் ஆளில்லா வானூர்திகளும் உக்ரேனை சனிக்கிழமை இரவு தாக்கியதில் குறைந்தது நான்கு பேர் மடிந்ததுடன் 20 பேர் காயமடைந்தனர். 

உக்ரேனியத் தலைநகர் கீவில் இருவர் கொல்லப்பட்டதுடன் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் நான்கு பிள்ளைகளும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரேனை ஆதரிக்கும் 20க்கும் அதிகமான நாடுகள், உலகச் சந்தையிலிருந்து ரஷ்யாவின் எரிபொருளை அகற்ற உறுதி கூறியதை அடுத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அண்மைய நாள்களில் ரஷ்யாவின் ஆகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் இரண்டின்மீது அமெரிக்காவும் பிரிட்டனும் வர்த்தகத் தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிகளைத் தடை செய்யும் வகையில் செயல்படுகிறது.

இதற்கிடையே, உக்ரேனியப் போரை நிறுத்துவதற்கான விருப்பம் இருந்தால் மட்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைத் தாம் சந்திக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.

“உடன்பாட்டை எட்டப்போகிறோமா என்பது பற்றி எனக்குத் தெரியவேண்டும். என் நேரத்தை நான் வீணடிப்பதாக இல்லை,” என்று அவர், மலேசியா செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னர் தற்போது நிலவும் பூசல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவேண்டும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரேனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியை ரஷ்யாவிடம் தரும்படி திரு புட்டின் கோரி வருகிறார். ஆனால் திரு ஸெலென்ஸ்கி, அதனை நிராகரித்து வருகிறார். 

குறிப்புச் சொற்கள்