டெஹ்ரான்: அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெய்கூட அனுப்பப்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஈரானின் புரட்சிக் காவற்படை செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) தெரிவித்திருக்கிறது.
ஆனால் எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் முடக்கினால் அதன் மீதான தாக்குதலை முடுக்கிவிடப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார்.
ஈரானின் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அந்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் ஆதரவளிப்பதைத் தொடர்ந்து உலக அளவில் நிதிச் சந்தைகள் ஏற்ற இறக்கமாக இருந்தன.
ஈரானின் ராணுவத்திற்குக் கடுஞ்சேதத்தை விளைவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் கூறுகிறார். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட நான்கு-வாரக் காலத்திற்கு முன்பே போர் முடிவுக்கு வந்துவிடும் என்று அவர் முன்னுரைக்கிறார்.
ஈரானில் சமயபோதகர் ஆட்சி முறையை அகற்றுவதே போரின் நோக்கம் என்கிறது இஸ்ரேல். ஈரானின் ஏவுகணை ஆற்றல்களையும் அணுத்திட்டத்தையும் அழிப்பதே குறிக்கோள் என்று வாஷிங்டன் சொல்கிறது. ஆயினும் இணக்கமான ஈரானிய அரசாங்கம் அமைந்த பிறகே போர் முடிவுக்கு வரும் என்று திரு டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் ஈரானோ, போரின் முடிவைத் தானே நிர்ணயிக்கப்போவதாகக் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது போர் தொடுத்தன. அதில் ஈரானியக் குடிமக்கள் 1,300க்கும் மேற்பட்டோர் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர். ஐக்கிய நாட்டுக்கான ஈரானியத் தூதர் அதனைத் தெரிவித்தார்.
போரால் ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக அதன்வழியாக எண்ணெய்க் கப்பல்கள் போய்வரமுடியவில்லை. சேமிப்புக் கிடங்குகள் நிரம்பிவிட்டதால் கடலிலிருந்து எண்ணெய் எடுக்கும் நடவடிக்கைகளை நிறுவனங்கள் நிறுத்திவைத்துள்ளன.

