ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல்; எண்ணெய் விலை இறங்கி, ஏறியது

ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல்; எண்ணெய் விலை இறங்கி, ஏறியது

2 mins read
84be70cb-4d35-47f6-8027-84d09d345c99
ஹோர்முஸ் நீரிணையில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கச்சா எண்ணெய் விலைகள் திங்கட்கிழமை அன்று (மே 25) ஏழு விழுக்காட்டுக்கும் மேல் குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது.

ஈரான்மீது புதிய தாக்குதல் நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 98 யுஎஸ் டாலருக்கு முன்னேறியது. அதே நேரத்தில் வெஸ்ட் டெக்சஸ் எண்ணெய் விலை யுஎஸ் டாலர் 91ஐத் தொட்டது.

அமெரிக்க-ஈரான் உடன்பாடு நெருங்கிவிட்டதாகக் கூறப்பட்ட வேளையில் அமெரிக்கப் படைகள் ஈரானின் ஏவுகணைத் தளங்களையும், கண்ணி வெடிகளை புதைக்க முயற்சித்த படகுகளையும் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியத்தை சுட்டிக்காட்டி நியூயார்க் டைம்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது.

இந்தத் தாக்குதலால் இறங்கியிருந்த எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது.

ஈரானின் கடலோர நகரமான சிரிக், ஜாஸ் அருகே நீரிணையைச் சுற்றி பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டன என்று ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

முன்னதாக பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் பதிவிட்டிருந்தார். அம்முயற்சி தோல்வியுற்றால் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் அச்சுறுத்தியிருந்தார். இதனால் வாரத்தின் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டது.

சமரசப் பேச்சில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் ராணுவத் தலைவர், ஓர் ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக சீனாவிடம் தெரிவித்திருந்தார்.

அமைதிக் காலத்தில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு முக்கிய பாதையாக விளங்கிய இந்த ஹோர்முஸ் நீரிணை, அமெரிக்கா மற்றும் ஈரானின் முற்றுகையால் மூடப்பட்டுள்ளது.

அண்மையத் தாக்குதல் தற்காப்பை நோக்கமாகக் கொண்டது என்று சென்ட்காம் விவரித்ததாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்