துபாய்: எண்ணெய் விலை திங்கட்கிழமை (ஜூன் 15) வெகுவாகக் குறைந்துள்ளது.
மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்பாடு எட்டப்பட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ஈரானின் வெளியுறவுத் துணை அமைச்சர் காஸிம் கரிபாபாடியும் தெரிவித்தனர். ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து எண்ணெய் விலை குறையத் தொடங்கியது.
சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 8.20 நிலவரப்படி, உலகளாவிய கச்சா எண்ணெய் விலைக் குறியீடான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, 4.3 விழுக்காடு சரிந்து பீப்பாய்க்கு $83.59ஆக இருந்தது. அதேநேரம் அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் விலை, 4.9 விழுக்காடு வீழ்ச்சிகண்டு 80.69 அமெரிக்க டாலராக இருந்தது.
ஹோர்முஸ் நீரிணையைச் சுங்கக் கட்டணம் ஏதுமின்றித் திறக்க அனுமதியளிப்பதாகத் திரு டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார். ஈரான் மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
“உலகில் உள்ள கப்பல்கள், இயந்திரங்களை இயக்கத் தொடங்கலாம். எண்ணெய் பாயட்டும்,” என்றார் திரு டிரம்ப்.
சுவிட்சர்லாந்தில் உடன்பாடு கையெழுத்தான பிறகே, அதன் விவரங்கள் வெளியிடப்படும் என்று திரு காஸிம் கரிபாபாடி தெரிவித்தார். கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கத் துணையதிபர் ஜேடி வான்ஸ் கூறினார். திரு டிரம்ப்பும் அதில் கலந்துகொள்ளக்கூடும் என்றும் அவர் கோடிகாட்டினார்.
இவ்வாண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கின. அதன் பிறகு மத்திய கிழக்கில் போர் வெடித்தது. உலக அளவில் எண்ணெய்ச் சந்தைகள் ஆட்டங்கண்டன. எண்ணெய் விலை முன்னெப்போதும் காணாத உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில், போர்நிறுத்தம் குறித்த அறிவிப்பு வந்ததால் எண்ணெய் விலை சரிந்துள்ளது.

