தோக்கியோ: ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வர்த்தகக் கப்பல்கள் வெளியேறுவதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (மே 25) எண்ணெய் விலை 5 விழுக்காட்டையும் கடந்து மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் அமைதி ஒப்பந்தத்தைக் குறித்து நிலையற்ற எதிரும்புதிருமான கருத்துகளை வெளியிட்டுவரும் வேளையில் ஆசிய பங்குச் சந்தைகளும் சற்று ஏற்றத்தை எட்டின.
உலக எண்ணெய் விலைக்கான பிரென்ட் குறியீடு 5.1 விழுக்காடு குறைந்து ஒரு பீப்பாய் S$125.46 (US$98.22) என இருந்தது. வட அமெரிக்கக் குறியீடான வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட், 5.2 விழுக்காடு வீழ்ச்சியடைந்து S$116.96 (US$91.57) என்று ஆனது.
ஜப்பானின் நிக்கெய் குறியீடு, ஆசிய சந்தைகளில் முன்னணி வகித்து 3 விழுக்காடு ஏற்றம் கண்டது. ஹாங்காங்கின் ஹாங்செங் குறியீடு 0.9 விழுக்காடும், சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 0.4 விழுக்காடும் காலை 9.39 மணி நிலவரப்படி உயர்ந்தன.
அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று வலுவிழந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்தது.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் சாத்தியம் உள்ளது என அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 24) தெரிவித்தாலும், இறுதி ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இன்னும் இழுபறியாகவே இருக்கிறது.
முடக்கப்பட்டுள்ள ஈரான் நிதி குறித்து புரிந்துணர்வு உடன்படிக்கையில் அமெரிக்கா பல நிபந்தனைகளை விதிப்பதால், பேச்சுவார்த்தை தோல்வி அடையும் வாய்ப்பும் உள்ளது என ஈரானின் தஸ்னிம் ஊடகம் எச்சரித்துள்ளது.

