எண்ணெய் விலையேற்றத்தைச் சமாளிக்க ஆசிய நாடுகள் நடவடிக்கை

மத்திய கிழக்கு உற்பத்தித் தட்டுப்பாட்டால் கச்சா எண்ணெய் விலை 20% ஏற்றம்

எண்ணெய் விலையேற்றத்தைச் சமாளிக்க ஆசிய நாடுகள் நடவடிக்கை

2 mins read
f2840308-9cab-4750-8f41-6e5b685c541b
ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நடந்த தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் உற்பத்திக் கிடங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) எரியும் தீ. - படம்: ஏஎஃப்பி

சோல்: மத்திய கிழக்கில் தொடரும் போரினால் அவ்வாட்டாரத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பாதிக்கப்பட்டு, அவற்றின் உற்பத்திகள் வெகுவாகக் குறைந்துள்ளன.

அதனால் கச்சா எண்ணெய்யின் விலை 20 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது. ஒரு பீப்பாயின் விலை தற்போது 128 வெள்ளியைக் (US$110) கடந்துவிட்டது என்று ஆசியச் சந்தைகள் திங்கட்கிழமை (மார்ச் 9) திறக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. அமெரிக்கச் சந்தையில் அவ்விலை 22 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஈரானின் மிரட்டலால் ஹோர்முஸ் நீரிணை, கப்பல் வர்த்தகத்துக்கு மூடப்பட்டுள்ளது.

ஈராக், குவைத் ஆகிய நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி வருகின்றன. ஏற்கெனவே கத்தார் அதன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியைக் குறைத்துள்ளது. போரின் விளைவால் மத்திய கிழக்கிலிருந்து கப்பலில் வரக்கூடிய விநியோகங்கள் தடைபட்டுள்ளன.

எண்ணெய்க் கிடங்கு வசதிகள் பாதிப்படைந்துள்ளதால் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும், சவூதி அரேபியாவும் அவற்றின் எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் சூழல் ஏற்படும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்துவரும் மத்திய கிழக்குப் பூசல் விரைவில் முடிவுக்கு வந்தாலும் சேதமடைந்துள்ள கட்டமைப்புகள், தடங்கலான விநியோகத் தொடர், நிலைகுலைந்த தளவாடங்கள், பாதுகாப்பற்ற கப்பல் போக்குவரத்து எனப் பல காரணங்கள், உலகளாவிய வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பாதிப்பை நெடுங்காலத்துக்கு ஏற்படுத்தும்.

எரிபொருள் விலைக்கு உச்ச வரம்பு

இதனையடுத்து, எண்ணெய் விலையேற்றம் பொருளியலில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைப்பதற்கு ஆசிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

உள்நாட்டில் எரிபொருள் விலை மிகவும் உயர்ந்துவிடாமல் தடுக்கும் நோக்கில், அதற்கு உச்ச வரம்பு விதிக்க தென்கொரிய அரசு திட்டமிட்டு வருகிறது.

தேவைப்பட்டால் நூறு பில்லியன் வொன் (S$85.56 பில்லியன்) மதிப்பிலான சந்தை நிலைப்படுத்தல் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அதிபர் லீ ஜே மியூங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேசிய எண்ணெய்ச் சேமிப்புப் பகுதியிலிருந்து கச்சா எண்ணெய்யை விடுவிக்கும்படி ஜப்பானிய அரசு உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் எரிபொருள்கள் மீதான இறக்குமதி வரியை நீக்க வியட்னாம் திட்டமிட்டு வருகிறது.

பல்கலைக்கழகங்களை மூடும் பங்ளாதேஷ்

இந்நிலையில், மின்சாரத்தையும் எரிபொருளையும் சேமிக்கும் வகையில், அவசரகால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பங்ளாதேஷ் பல்கலைக்கழகங்களுக்கு ரமலான் விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு, திங்கட்கிழமையிலிருந்து (மார்ச் 9) மூடப்படுகின்றன.

அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தும்.

குறிப்புச் சொற்கள்