எண்ணெய் விலை 4%க்கும் மேல் ஏற்றம்

எண்ணெய் விலை 4%க்கும் மேல் ஏற்றம்

2 mins read
33551912-7a43-477e-b1f5-7e3b9b7c71b9
அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்களைத் தொடுத்துவரும் நிலையில், எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. - படம்: புளூம்பெர்க்

தோக்கியோ: எண்ணெய் விலை 4 விழுக்காட்டுக்கும் மேல் ஏற்றங்கண்டுள்ளது.

அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்களைத் தொடுத்துவரும் நிலையில், எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டுள்ளதா, இல்லையா என்பதுகுறித்து இரண்டும் வேறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

பிரென்ட் கச்சா எண்ணெய், சிங்கப்பூர் நேரப்பட்டி திங்கட்கிழமை காலை மணி 9.40க்கு, 4.1 விழுக்காடு கூடுதலாகிப் பீப்பாய்க்கு $79.14 அமெரிக்க டாலராக இருந்தது. சென்ற வாரம் விலையேற்றம் 5.4 விழுக்காடாகப் பதிவானது. யுஎஸ் வெஸ்ட் டெச்கசஸ் இன்டர்மீடியட் எண்ணெய் விலை, 4.3 விழுக்காடு அதிகரித்து $74.46 அமெரிக்க டாலராகப் பரிவர்த்தனை செய்யப்பட்டது.

ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலையும் கூடியது. பாரசீக வளைகுடாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஏற்றுமதியும் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை நிலவியதே அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.

அடுத்த அறிவிப்பு வரும்வரை, நீரிணை மூடப்பட்டிருக்கும் என்று ஈரான் கூறியது. ஆனால் அமெரிக்க மத்திய தளபத்தியம் அந்தத் தகவலை மறுத்தது. நீர்வழியில் கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிசெய்யத் தனது துருப்புகள் கூடுதல் தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாக அது தெரிவித்தது.

அமெரிக்காவின் ஆக அண்மைத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடத்தப்பட்டது. அதையும் சேர்த்து, ஒரு வாரத்தில் அமெரிக்கா நான்கு முறை தாக்கியுள்ளது. சைப்ரஸ் கொடி பொருத்தப்பட்டிருந்த கப்பலை ஈரான் தாக்கியதற்குப் பதிலடியாகவே அமெரிக்காவின் அண்மை நடவடிக்கை அமைந்ததாக மத்திய தளபத்தியம் குறிப்பிட்டது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மோதல் வலுத்துவரும் நிலையில், அரசதந்திரத் தீர்வுகளை எட்டுவதற்கான சாத்தியங்கள் மங்கிவருகின்றன.

ஒருதலைபட்சமான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக ஈரானின் நாடாளுமன்ற நாயகரும் மூத்த சமரசப் பேச்சாளருமான திரு முகம்மது பாகெர் கலிபாஃப் கூறினார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்துக் குறித்து முன்னர் கொடுத்த உறுதிமொழிகளை அமெரிக்கா மதித்து நடக்க வேண்டும் என்று துருக்கி வலியுறுத்துகிறது.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையில் நிலவிய சண்டைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். சமரசப் பேச்சுகளைத் தொடர அமெரிக்கா ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்விலைஅமெரிக்காஈரான்ஈரான் போர்