மத்திய கிழக்குப் போர் காரணமாக எண்ணெய் விலை உயர்வு

மத்திய கிழக்குப் போர் காரணமாக எண்ணெய் விலை உயர்வு

படம்: தமிழ் மலர்

10 Mar 2026 - 2:18 pm

1 mins read

அம்பாங்: மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள் கடத்தலைத் தடுக்க உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரச் செலவு அமைச்சு, தனது அமலாக்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்று மலேசிய அமைச்சர் அர்மிசான் முகம்மது அலி தெரிவித்துள்ளார்.

உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்ததால், மலேசியாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையில் எரிபொருள் விலைகளில் பெரிய வித்தியாசம் உருவாகும் அபாயம் இருப்பதாகவும், அதனால் எரிபொருள் கடத்தல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

மலேசியாவில் எரிபொருளுக்கு வழங்கப்படும் மானியம் காரணமாக உள்ளூர் விலைகள் அண்டை நாடுகளைவிட குறைவாக உள்ளன. இந்த விலை வேறுபாட்டைப் பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக எரிபொருளைக் கடத்த முயலலாம் என்ற கவலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், அரசாங்கம் டீசல் மற்றும் ரோன்95 பெட்ரோலுக்கு வழங்கும் மானியத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கட்டுக்கோப்பான முறையில் மானிய திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இருந்தாலும், உலகச் சந்தை விலை உயர்வின்போது கடத்தல் அபாயம் இன்னும் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“மலேசியாவுக்கு அண்டை நாடுகளில் எரிபொருளுக்கு மானியம் வழங்கப்படாததால் விலை வேறுபாடு உருவாகிறது. இதனால் கடத்தல் அபாயம் ஏற்படக்கூடும்,” என்று அவர் கூறினார்.

எனவே, சட்டவிரோத எரிபொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அமலாக்க அமைப்புகள் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பையும் சோதனைகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்விலையேற்றம்கடத்தல்