மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா பரிந்துரைத்த ஒப்பந்தத்துக்கு ஈரான் வழங்கியுள்ள மாற்று கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
எனவே ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து வர்த்தகத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையானது.
அதன்விளைவால் உலக எண்ணெய் விலையின் அளவுகோலாகக் கருதப்படும் பிரண்ட் குறியீடு 3.5 விழுக்காடு ஏற்றம் கண்டு, ஒரு பிப்பாய் S$133 (US$104.80) என ஆனது.
வட அமெரிக்க குறியீடான வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட்டின் ஒரு பீப்பாய் எண்ணெய், S$125 (US$99) என்ற விலையை எட்டியது.
சமூக ஊடகத்தில் தமது கருத்தை வெளியிட்ட அதிபர் டிரம்ப், “முற்றிலும் ஏற்றக்கொள்ளமுடியாது” என ஈரானின் நிபந்தனைகளைக் குறிப்பிட்டார்.
இவைபோன்ற வேறுபாடுகளால், நடப்பில் உள்ள சண்டை நிறுத்தத்தைத் தொடர இரு நாடுகளும் போராடி வருகின்றன.
கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, எரிபொருள் ஆகியவற்றின் விநியோகம், போர் தொடங்கிய பிப்ரவரி மாதத்தில் இருந்து உலகமெங்கும் தடைபட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையின் தேக்கம், விலைவாசியை உயர்த்தி பணவீக்கத்தைப் பாதித்துவிட்டது.
வரலாறு காணாத அளவில் விநியோகத்தொடருக்கு பெரும் அதிர்ச்சியை மத்திய கிழக்குப் போர் ஏற்படுத்திவிட்டதாக அனைத்துலக எரிபொருள் முகவை தெரிவித்தது.

