ஏடென்: எண்ணெய் விலைகள் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) 3 விழுக்காட்டுக்கும் மேல் கூடியுள்ளன.
சவூதி அரேபியா மீது ஹூதி அமைப்பினரும் வளைகுடாப் பகுதியில் கப்பல்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய்க் குழாயைச் சவூதி மூடியதே அதற்குக் காரணம்.
சிங்கப்பூர் நேரப்படி காலை மணி 11.40 நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் வர்த்தகம் பீப்பாய்க்கு 3.21 அமெரிக்க டாலர் அல்லது 3.1 விழுக்காடு உயர்ந்து 107.82 அமெரிக்க டாலராக இருந்தது.
வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் வர்த்தகம் பீப்பாய்க்கு 3.17 அமெரிக்க டாலர் அல்லது 3.2 விழுக்காடு கூடுதலாகி 103.22 அமெரிக்க டாலருக்கு உயர்ந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் ஈரானுக்கும் ஏனைய பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் இடையே திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் அரசதந்திர முயற்சிகள் தொய்வடைந்ததைப் போல் தெரிகிறது.
அதேவேளையில், உலகின் மிக முக்கிய எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதைகள் இரண்டைச் சுற்றி நடத்தப்பட்ட புதிய தாக்குதல்கள், உலகளாவிய எரிபொருள் விநியோகம் குறித்த கவலையை அதிகரித்துள்ளன.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவிலிருந்து எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சந்தைகள் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதும் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் சேதமடைந்த தனது முக்கிய 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள கிழக்கு-மேற்கு எண்ணெய்க் குழாயைச் சவூதி அரேபியா வார இறுதி முழுதும் மூடிவைத்திருந்தது.
திங்கட்கிழமை திட்டமிடப்பட்டிருந்த வட்டாரக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓமான் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைடி ஞாயிற்றுக்கிழமை பின்னேரத்தில் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
ஒருமித்த கருத்தைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். அதனைத் தொடர்ந்து குறுகிய காலத்தில் அரசதந்திரத் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை மங்கியுள்ளது.
வளைகுடா அரபு நாடுகளுடனான சந்திப்பில் பங்கேற்கப்போவதாக ஈரானிய அதிகாரிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர். ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பது குறித்து ஓமானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைச் சமர்ப்பிக்கப்போவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
வட்டார நாடுகள் சிலவற்றின் வேண்டுகோளுக்கு இணங்கவே ஓமான் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்ற தேதியைத் தீர்மானிப்பதில் ஓமானுடன் ஒருங்கிணைந்து செயல்படப்போவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சு அதிகாரி தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் கொண்டுசெல்வதற்கான முக்கியப் பாதையாக விளங்கிய எண்ணெய்க் குழாயைச் சவூதி அரேபியா தற்காலிகமாக மூட முடிவெடுத்ததைத் தொடர்ந்து அண்மை நடவடிக்கை வந்துள்ளது.

