ஜோகூர் பாரு: ஜோகூரின் தஞ்சோங் லங்சாட் துறைமுக முனையத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு சம்பவம் குறித்த விசாரணை தூய்மைப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததற்குப் பின் தொடங்கும்.
பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவுப் பணிகள் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருப்பதை மலேசிய சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் லிங் தியென் சூன் தெரிவித்தார்.
அடுத்த இரண்டு நாள்களுக்குள் துப்புரவுப் பணிகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்ப்பதாகவும் பணிகள் முடிந்தவுடன் அமலாக்க நடவடிக்கை எடுக்க விசாரணை தொடங்கப்படும் என்றும் திரு சூன் குறிப்பிட்டார்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் எண்ணெய்க் கசிவு சம்பவம் தஞ்சோங் லங்சாட் துறைமுக முனையத்திற்கு அருகில் வசிப்போருக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் நீர்நிலைகளிலும் குறிப்பிட்ட சில இடங்களிலும் எண்ணெய்க் கசிவு படர்ந்ததாக அதிகாரிகள்மூலம் அறிந்துகொண்டதாகச் சொன்ன அவர், அடிக்கடி கலந்துரையாடியதன்மூலம் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது என்றார்.
இதற்கிடையே, ஜோகூர் தெற்கு மீனவர் சங்கத் தலைவர் அஸ்லி முகமது அஸிஸ், முனையத்துக்கு அருகிலிருந்த உள்ளூர் மீனவர்களையும் பெரிகி அச்சே கம்பத்தையும் எண்ணெய்க் கசிவு பாதிக்கவில்லை என்றார்.
அதிர்ஷ்டவசமாக, சம்பவத்தின்போது மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் நோன்புப் பெருநாளை உற்றார் உறவினர்களுடன் கொண்டாடிக்கொண்டிருந்தனர் என்றார் அவர்.
முனையத்தின் தொட்டியிலிருந்து துறைமுகத்திலிருந்த கப்பலுக்குச் சென்ற எண்ணெய்க் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏறக்குறைய 1,600 லீட்டர் எண்ணெய் கடலில் கசிந்ததாக மதிப்பிடப்பட்டது.