மலேசியாவில் பழைய கடப்பிதழ்கள் முடிந்த பிறகே புதியனவற்றுக்கு மாற்றம்

மலேசியாவில் பழைய கடப்பிதழ்கள் முடிந்த பிறகே புதியனவற்றுக்கு மாற்றம்

2 mins read
6019ae36-7687-4cf9-9045-9b66efc14502
மலேசியக் கடப்பிதழ். - படம்: மலாய் மெயில்

புத்ராஜெயா: மலேசியாவில் பழைய கடப்பிதழ்கள், ‘மைகாட்’ அடையாள அட்டைகளுக்கான முந்தைய ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டாலும் அவை தொடர்ந்து விநியோகிக்கப்படும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஜூன் 1 நிறைவடைந்த ஒப்பந்தம்

பழைய ஒப்பந்தம் ஜூன் மாதம் முதல் தேதி நிறைவடைந்தது. எஞ்சியிருக்கும் பழைய கடப்பிதழ்கள், அடையாள அட்டைகள் முடிந்துபோன பிறகே ஆக அண்மையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி அரசாங்கம் புதியனவற்றுக்கு மாறும் என்று திரு சைஃபுதீன் குறிப்பிட்டார்.

“தற்போது மிச்சமிருக்கும் கடப்பிதழ்களையும் அடையாள அட்டைகளையும் விநியோகித்து முடிப்போம்.

“புதிய ஒப்பந்தம் நடப்புக்கு வந்துவிட்டாலும்கூட பழையனவற்றை அப்புறப்படுத்தத் தேவையில்லை,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். திங்கட்கிழமை (ஜூன் 8) அமைச்சின் மாதாந்தர ஒன்றுகூடலுக்குப் பிறகு செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.

இன்னும் பயன்படுத்தும் நிலையில் உள்ள கடப்பிதழ்கள், அடையாள அட்டைகளை அப்புறப்படுத்தத் தேவையில்லை என்றும் அவர் சுட்டினார்.

அதோடு, ‘மைகாட்’ அடையாள அட்டைக்கான தேவை அதிகமாக இருந்துவருவதாகவும் திரு சைஃபுதீன் தெரிவித்தார். குறிப்பாக, 12 வயதை எட்டவிருக்கும் சிறாருக்கு இது பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாதந்தோறும் 35,000 ‘மைகாட்’ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. தற்போது மிச்சமிருக்கும் அடையாள அட்டைகள் முடிந்துபோன பிறகே புதிய ஒப்பந்தம் நடப்புக்கு வரும் என்றும் திரு சைஃபுதீன் கூறினார்.

அரசாங்க வளங்கள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுதல்

அரசாங்க வளங்கள் வீணாவதைத் தவிர்க்கும் வகையில் புதிய ஒப்பந்தத்துக்கு மாறிக்கொள்ளும் நடைமுறை ஆக்ககரமான முறையில், அதிகம் செலவின்றி செயல்படுத்தப்படும் என்றும் திரு சைஃபுதீன் விளக்கினார்.

10 ஆண்டுகாலத்துக்குக் கடப்பிதழ் வழங்குவது தொடர்பான பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தது. அது தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

அதன் தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்