இஸ்கந்தர் புத்ரி: அமெரிக்காவின் ஒலிவர் ஹெல்த்கேர் பேக்கேஜிங் (Oliver Healthcare Packaging) நிறுவனம் வியாழக்கிழமை (மே 15) 120,000 சதுர அடியில் உற்பத்தி ஆலையை மலேசியாவில் உள்ள ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் திறந்துள்ளது.
வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த ஆக பெரிய உற்பத்தி ஆலையில் மருத்துவ தரம் வாய்ந்த பைகள், மூடிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படும்.
ஜோகூர் மாநில முதலீட்டு, வர்த்தக, பயனீட்டாளர் தொடர்பு, மனிதவள குழுவின் தலைவர் லீ டிங் ஹன் ஆலையைத் திறந்துவைத்தார்.
ஒலிவர் நிறுவனம், ஆலையில் கிட்டத்தட்ட $60 மில்லியன் டாலர் முதலீடு செய்யும் என்று குறிப்பிட்ட திரு ஹன், அதன் மூலம் 450 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.
புதிய வேலை வாய்ப்புகள் தரம், பொறியியல், தளவாடம், விநியோகத் தொடர்பு ஆகிய துறைகளில் அமைந்திருக்கும்.
ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள ஆலை, அந்த முழு ஆற்றலை இன்னும் எட்டவில்லை. அடுத்த ஆண்டுக்குள் ஆலை 20 விழுக்காட்டு செயல்பாட்டை எட்டும் என்றும் 50 ஊழியர்களைப் பணியமர்த்தும் என்றும் ஒலிவர் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான திரு மைக்கல் பெனவென்டோ தெரிவித்தார்.
ஒலிவர் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் தலைமை நிர்வாகி கென்னத் டி முயிங்க், “ஜோகூரில் உள்ள புதிய வசதி ஆசிய பசிபிக் வட்டாரத்தில் உள்ள பயனீட்டாளர்களின் தேவையைச் சமாளிக்க உதவும்,” என்றார்.
வேலைக்குத் தேவையான ஆள் கிடைப்பதாலும் நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் ஜோகூர் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது என்றார் திரு முயிங்க்.
தொடர்புடைய செய்திகள்
ஆசியாவில் உள்ள மருத்துவத் துறைக்கு ஆதரவளிக்க ஒலிவர் நிறுவனம் புதிய திறன்களில் முதலீடு செய்துவருகிறது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒலிவர் நிறுவனம் 2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அதன் வட்டாரத் தலைமையகத்தை அமைத்தது.
அதற்கு ஈராண்டுகளுக்குப்பின் வட்டார தொழில்நுட்ப நிலையத்தையும் ஒலிவர் நிறுவனம் தொடங்கியது.