துபாய்/ புதுடெல்லி: ஓமானுடனான இருதரப்பு வர்த்தகத்தையும் முதலீட்டையும் பெருக்கிக்கொள்ள பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு ஒன்றை இந்தியா செய்துகொண்டுள்ளது.
மத்தியக் கிழக்கு உறவுகளை வலுப்படுத்தி அமெரிக்காவின் கடுமையான வரிகளிலிருந்து தப்பிக்க இந்தியா அத்தகைய உடன்பாட்டைச் செய்ததாகத் தெரிகிறது.
கிட்டத்தட்ட 98 விழுக்காட்டு இந்திய ஏற்றுமதிகள்மீது ஓமான் வரிவிலக்கு அளித்துள்ளது. அவற்றுள் விலையுயர்ந்த கற்கள், ஆபரணங்கள், துணிமணிகள், மருந்துப் பொருள்கள் ஆகியவை அடங்கும் என்று இந்திய வர்த்தக அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
அதற்குப் பதிலாக ஓமானிலிருந்து இறக்குமதியாகும் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டுப் பொருள்கள்மீது வரிவிலக்கு அளிக்கிறது.
இந்தியாவுக்கும் ஓமானுக்கும் இடையிலான வருடாந்தர வர்த்தகத்தின் மதிப்பு $10 பில்லியனுக்கும் மேல்.
இருநாடுகளும் செய்துகொண்ட உடன்பாட்டு வர்த்தகத்தில் புது அத்தியாயம் என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்து பல துறைகளில் புதிய வாய்ப்புகளுக்கான வாசலைத் திறக்கும் என்றார்.
ஓமானுக்குமுன் இந்தியா இவ்வாண்டு பிரிட்டனுடன் இதேபோன்ற உடன்பாட்டைச் செய்துகொண்டது. அதன்வழி இந்தியப் பொருள்கள் புதிய சந்தைகளில் கால் பதிக்க முடியும் என்றார் திரு மோடி.
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓமான் செய்துகொண்ட முதல் இருதரப்பு உடன்பாடு இது.
தொடர்புடைய செய்திகள்
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தியப் பொருள்கள்மீதான வரிகளை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 50 விழுக்காட்டுக்கு உயர்த்தினார். உலக நாடுகள்மீது விதிக்கப்பட்ட வரிகளில் அதுவே ஆக அதிகம்.
பல்வேறு சமரசக் கலந்துரையாடல்களுக்குப் பிறகும் அமெரிக்காவுடனோ ஐரோப்பிய ஒன்றியத்துடனோ இந்தியாவில் இவ்வாண்டு இருதரப்பு உடன்பாட்டை எட்ட முடியாமல்போனது.
ஓமானுடன் இந்தியா செய்துகொண்ட உடன்பாடு மூலம் அடுத்த மூவாண்டுகளில் இந்தியாவின் விலையுயர்ந்த கற்கள், ஆபரணங்களின் ஏற்றுமதி 35 மில்லியன் டாலரிலிருந்து 150 மில்லியன் டாலர் வரை பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

