கொழும்பு: இலங்கையில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாக அந்நாட்டின் மகளிர், சிறார் விவகாரத்துறை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு, கடத்தலுக்கு எதிரான அனைத்துலக நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற தேசிய போதைப்பொருள் எதிர்ப்புப் பேரணியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டார்.
போதையில்லாச் சமூகத்தை உருவாக்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ‘ஒன்றிணைந்த நாடு’ எனும் தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின்கீழ், மறுவாழ்வுப் பணியகம் அப்பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் கலந்துகொண்ட அமைச்சர் சரோஜா சாவித்திரி, “குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாவதால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள தாய்மார்களும் பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களைப் போதையிலிருந்து மீட்டெடுக்க பெருமுயற்சி தேவை,” என வலியுறுத்தினார்.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிழல் உலகக் கும்பல்களுடன் அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்பு அண்மைய கைது நடவடிக்கைகள்மூலம் அம்பலமாகி வருவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜெபால குறிப்பிட்டார்.
போதைப்பொருள் கடத்தல், திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டோரை விடுவிக்க பல மில்லியன் ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் கடந்த காலங்களில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க அரசு வழிமுறைகளே தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
அத்தகைய சம்பவங்களை அப்படியே மறக்கடிக்க அனுமதிக்க முடியாது என்றும் அவற்றுடன் தொடர்புடையவர்கள் தங்கள் செயல்களுக்குக் கண்டிப்பாகப் பொறுப்பேற்பதை அரசு உறுதிசெய்யும் என்றும் அமைச்சர் விஜெபால உறுதிகூறினார்.

