ஹாங்காங்: கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் காவல்துறை அதிகாரிகளைக் கொல்ல வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தத் திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் குற்றவாளி என்று வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 29) ஹாங்காங் நீதிமன்றம் ஒன்றில் நிரூபணமானது. சம்பந்தப்பட்ட மேலும் அறுவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பெரிய அளவில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அந்தக் காலகட்டத்தில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது என்று கூறப்படுகிறது.
அந்த ஆர்ப்பாட்டங்களைக் காவல்துறையினர் பின்னர் அடக்கினர்.
வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்பட்ட எழுவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தவிருந்த பாதையில் இரண்டு குண்டுகளை வைக்கத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் 2002ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து 2019ல்தான் ஹாங்காங்கில் அச்சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
குற்றஞ்சாட்டப்பட்டோரில் அறுவர் குற்றம் புரியவில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதாக ஹாங்காங் ஊடகங்கள் வியாழக்கிழமையன்று தெரிவித்தன. எனினும், லாய் சின்-போங் எனும் ஆடவர் உயிர் அல்லது பொருள் சேதம் ஏற்படும் வகையில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தும் திட்டத்தில் ஈடுபட்டதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
கைதானபோது அவருக்கு வயது 29.