பிரிட்டனில் இரு ரயில்கள் மோதியதில் ஒருவர் மரணம், பலர் காயம்

பிரிட்டனில் இரு ரயில்கள் மோதியதில் ஒருவர் மரணம், பலர் காயம்

1 mins read
5192bfb2-9495-4032-b46e-05df54a7b3ca
லண்டனுக்கு 90 கிலோமீட்டர் வடக்கே பெஃபர்ட் நகருக்கு அருகே விபத்து நேர்ந்த இடத்திற்கு அவசரச் சேவைப் பிரிவினர் விரைந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு வடக்கே வெள்ளிக்கிழமை (ஜூன் 19) இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் மாண்டார்.

ரயில் விபத்தில் பலர் காயமுற்றனர். அவர்களில் 11 பேருக்கு மிகவும் கடுமையான காயங்களும் 22 பேருக்குக் கடுங்காயங்களும் ஏற்பட்டன. மேலும் 56 பேருக்கு லேசான காயங்கள் உண்டானதாகவும் பிரிட்டன் அவசரச் சேவை அமைப்பு தெரிவித்தது.

லண்டனுக்கு 90 கிலோமீட்டர் வடக்கே பெஃபர்ட் நகருக்கு அருகே விபத்து நேர்ந்தது. ஒரே தண்டவாளத்தில் லண்டனை நோக்கிச் சென்ற இரண்டு ரயில்கள் மோதிக்கொண்டதாக ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் ரயில்வே குறிப்பிட்டது.

“முன்புறம் இருந்த நாற்காலிக்குத் தூக்கி வீசப்பட்டேன். புகை கிளம்பியதைப் பார்த்தேன். மக்கள் அழுதனர்; கத்திக் கூச்சலிட்டனர். அவர்கள் அச்சத்துடனும் குழப்பத்துடனும் காணப்பட்டனர்,” என்று பீட் நேப் எனும் பயணி ஒருவர், ‘பிரெஸ் அசோசியேஷன்’ செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.

“பலரால் பேசமுடியவில்லை. கால்களில் முறிவு ஏற்பட்டிருந்தது,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்