டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டங்களில் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
திருவாட்டி ஹசினாவின் அவாமி லீக் கட்சி 2009 முதல் பங்ளாதேஷில் ஆட்சிபுரிந்து வருகிறது. அக்கட்சியின்கீழ் பங்ளாதேஷில் மனித உரிமை மீறல்களும் ஊழலும் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவாட்டி ஹசினாவைப் பதவி விலகச்செய்ய நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்துமாறு எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியும் பற்பல சிறிய கட்சிகளும் மக்களுக்கு அழைப்பு விடுத்தன.
செவ்வாய்க்கிழமையன்று தலைநகர் டாக்காவிலும் குறைந்தது வேறு 16 இடங்களிலும் தங்களது தலைமையின்கீழ் போராட்டம் நடத்தியவர்கள் தாக்கப்பட்டதாக தேசியவாதக் கட்சி தெரிவித்தது.
“லட்சுமிபூரில் எங்கள் ஆதரவாளர்களில் ஒருவரான சஜிப் ஹுசேன், ஆளும் கட்சியின் மாணவர் அணி உறுப்பினர்களால் வெட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்,” என்று கட்சியின் பேச்சாளர் சாஹிர் உடின் ஸ்வாபன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தது 200 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 50 பேர் காயமடைந்ததாகவும் லட்சுமிபூர் சடார் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஸைனல் அபிதின் தெரிவித்தார்.
“மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த உடற்கூறாய்வு செய்யப்படவேண்டும்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான மோதலால் சஜிப் ஹுசேன் உயிரிழந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்று காவல்துறைக் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாடெங்கிலும் நிகழ்ந்த வன்முறை பற்றி தேசிய காவல்துறைப் பேச்சாளர் மொன்சூர் ரஹ்மான் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, பங்ளாதேஷ் அரசியல் நிலவரம் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
பிரதமர் ஷேக் ஹசினாவின் பாதுகாப்புப் படையினர் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களைக் காவலில் வைத்திருந்ததாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. நூற்றுக்கணக்கான தலைவர்களும் ஆதரவாளர்களும் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
பங்ளாதேஷில் நியாயமான முறையில் தேர்தல் நடத்துமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. சென்ற வாரம், அமெரிக்க வெளியுறவு அமைச்சின் மூத்த பேராளர்கள் இருவர் பங்ளாதேஷ் அதிகாரிகளை டாக்காவில் சந்தித்துப் பேசினர்.
ஏறக்குறைய 50,000 பேர் சென்ற வாரம் டாக்காவில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அந்தக் கூட்டம் நடந்தது.
தற்போதைய பங்ளாதேஷ் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முடிவுக்கு வரவுள்ளது. அதற்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.

