அட்லான்டா: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவில் ரோலர்கோஸ்டர் விபத்துக்குள்ளானதில் பயணி ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.
77 மீட்டர் உயரத்திலிருந்து மணிக்கு 136 கிலோமீட்டர் வேகத்தில் பாயக்கூடிய அந்த ரோலர்கோஸ்டரிலிருந்து பயணிகள் வெளியேற்றப்படும் காணொளிகள் இணையத்தில் பரவுகின்றன.
பாதிக்கப்பட்டவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள கேளிக்கைப் பூங்கா நிறுவனம், பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்தது.
அட்லாண்டா நகருக்கு மேற்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அப்பூங்கா, அமெரிக்காவின் மிகப்பெரிய வட்டாரக் கேளிக்கைப் பூங்கா நிறுவனமான ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது.
ஊழியர்களும் உள்ளூர் அதிகாரிகளும் உடனடியாகச் செயல்பட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து ஆறு கேளிக்கைப் பூங்காக்களிலுள்ள ஒன்பது ரோலர்கோஸ்டர்களை ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ்’ நிறுவனம் திங்கட்கிழமை தற்காலிகமாக மூடியது.
முன்னதாக, கலிபோர்னியாவிலுள்ள அதன் பூங்காவில் இருந்த ‘எக்ஸ்2’ (X2) ரக ரோலர்கோஸ்டரை நிரந்தரமாக மூடவுள்ளதாக கடந்த செப்டம்பரில் நிறுவனம் அறிவித்திருந்தது.
அந்த ‘எக்ஸ்2’ சவாரியால் தீவிர மூளைக் காயம் அடைந்ததாகக் கூறி மூவர் வழக்குத் தொடுத்துள்ளதாக ‘டார்டிக் லா கார்ப்’ சட்ட நிறுவனம் தெரிவித்தது. மேலும், காயமடைந்ததாகக் கூறிய 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைத் தாங்கள் பிரதிநிதிப்பதாகவும் அந்நிறுவனம் கூறியது.
எனினும், ‘எக்ஸ்2’ சவாரி பல பாதுகாப்புச் சோதனைகளை நிறைவேற்றியுள்ளது என்று ‘சிக்ஸ் ஃபிளாக்ஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
