தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒரேயொரு தேர்தல் போதும்: இந்தோனீசிய அதிபர் பரிந்துரை

2 mins read
439fcb11-672f-4472-851f-8426af27d32d
தேர்தலில் மிச்சமாகும் பணத்தை நாட்டின் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியுள்ளார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, நாட்டில் நடத்தப்படும் தேசிய அளவிலான இரண்டு தேர்தல்களில் ஒன்றை அகற்ற வேண்டும் என்று யோசனை கூறியுள்ளார்.

இதன் மூலம் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று அவர் சொன்னார்.

உலகின் 3வது ஆகப்பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியாவில் தற்போது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு தேர்தலும் மேயர், ஆளுநர், நகராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க தேசிய, வட்டார அளவில் மற்றொரு தேர்தலும் நடைபெறுகின்றன.

இதில் ஒன்றை நிறுத்த வேண்டும் என்பது அவரது யோசனை.

குறிப்பாக மேயர்கள், ஆளுநர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்றும் அவர்களை வட்டார சட்டமன்றங்களே தேர்வு செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தேர்தலுக்கு செலவழிக்கப்படும் நிதியை மேம்பாடுகளுக்கும் பள்ளி மாணவர்களின் மதிய உணவுக்கும் பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்தார்.

“நமது ஜனநாயகத்தில் இது குறித்து முடிவு செய்ய வேண்டும்,” என்று கோல்கார் கட்சி மாநாட்டில் அவர் சொன்னார்.

இரண்டு தேர்தல்களையும் சுட்டிக்காட்டிய அவர், ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு டிரில்லியன் கணக்கான பணம் செலவழிக்கப்படுவதாகச் சொன்னார்.

ஆனால் உள்ளூர் தலைவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கலாம் என்ற திரு பிரபோவோவின் கருத்து, மறைந்த அடக்குமுறை ஆட்சியாளரான அவரது மாமனார் சுகார்த்தோவை நினைவூட்டுகிறது. அவருக்குக் கீழ் சிறப்புப் படைத் தளபதியாக இருந்த அவர், மனித உரிமை மீறல்களுக்காக ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகளை பிரபோவோ சுபியாந்தோ தொடர்ந்து மறுத்து வருகிறார்.

திரு பிரபோவோ கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்தலில் 58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அதிபர் பதவிக்கான மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். ஒரு கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணியை உருவாக்கி, அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

குறிப்புச் சொற்கள்