ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுலவேசித் தீவில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) ஏற்பட்ட 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பாலு (Palu) நகரத்திற்குத் தென்கிழக்கே கிட்டத்தட்ட 42 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக இந்தோனீசியாவின் வானிலை, காலநிலை, புவி இயற்பியல் முகமை (பிஎம்கேஜி) குறிப்பிட்டது.
நிலநடுக்கத்தால் சீகி வட்டாரத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 38 பேர் காயமுற்றதாகவும் அவ்வமைப்பு தெரிவித்தது.
மத்திய சுலவேசி மாநிலத்தில் மூன்று வட்டாரங்களை இணைக்கும் முக்கியச் சாலை சேதமடைந்தது. அத்துடன், வழிபாட்டுத் தலங்கள், பாலங்கள், அலுவலகங்கள், ஆகியனவும் 67 வீடுகளும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு பாலு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஏறத்தாழ ஆறு மீட்டர் உயரத்திற்குச் சுனாமியை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புக்குக் காரணமானது.
தென்னமெரிக்கா முதல் ரஷ்யாவின் தூரக் கிழக்குவரை பல எரிமலைகளைக் கொண்டிருக்கும் ‘பசிபிக் நெருப்பு வளைய’ பகுதியில் இந்தோனீசியா அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

