தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒற்றைக் காலுடன் 5,000 கி.மீ. பயணம்!

2 mins read
fc7d36d3-2cdf-437e-b701-96c1d55f478b
ஒற்றைக் கால் வெள்ளை உள்ளான் பறவை. - படம்: ஊடகம்

கல்பா கடற்கரையில் ஒற்றைக் காலுடன் அங்குமிங்கும் ஓடி இரை தேடிய வெள்ளை உள்ளான் (சேண்டர்லிங்) பறவை, கானுயிர் வல்லுநர் ஒருவரை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உள்ளது அக்கடற்கரை.

கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல கல்பா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது, பிறந்து நான்கு மாதங்களேயான அந்த ஒற்றைக்கால் பறவையைக் கண்டு வியப்புற்றார் உள்ளூர்க் கானுயிர் வல்லுநரான முகம்மது ரேசா கான்.

ஆர்க்டிக் வட்டாரத்திலிருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்த பின்னும் ஒற்றைக் காலுடன் அப்பறவை எந்தச் சிரமமுமின்றி பறந்தும் ஓடியும் இரை தேடலில் ஈடுபட்டிருந்ததைத் திரு கான் கண்டார்.

“பறவைகள் பறக்க இறக்கைகள் தேவை. ஆனால், அவை பறக்கத் தொடங்கும்போதும் தரையிறங்கும்போதும் அவற்றின் கால்கள் முக்கியப் பங்காற்றுகின்றன,” என்று அவர் கூறியதாக, யுஏஇ ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

“வெள்ளை உள்ளான்களைப் பொறுத்தமட்டில், அலைகள் கரை தொட்டு, மீண்டும் கடலுக்குள் திரும்பும்போது, ஈர மணலில் நண்டு போன்ற சிற்றுயிர்களை விட்டுச்சென்றுள்ளனவா என்று அப்பறவைகள் விரைந்தோடித் தேடும். அதற்கு அவற்றுக்குக் கால்கள் முக்கியம். இந்நிலையில், ஒற்றைக் காலுடன் கூடிய அந்த உள்ளான் பறவை, இங்குமங்கும் விரைந்தோடியதைக் கண்டபோது பெருவியப்படைந்தேன்,” என்றார் திரு கான்.

தாய்ப் பறவைகள் முன்னதாகவே கிளம்பிவிடும் என்பதால், குஞ்சுகள் தாமாகவே வலசை (இடப்பெயர்வு) செல்ல வேண்டும்.

இந்த ஒற்றைக் கால் உள்ளான், கடந்த ஜூலை மாதந்தான் பிறந்திருக்க வேண்டும் என்பது திரு கானின் கணிப்பு.

ஆர்க்டிக் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரு நாட்டிலிருந்து, செங்கடல் நோக்கி வலசை கிளம்பியபோது, இடையில் கல்பா கடற்கரையில் அவை தரையிறங்கி இருக்கலாம் என்றார் அவர்.

இந்நிலையில், இந்த ஒற்றைக்கால் உள்ளான் பிறக்கும்போதே அப்படிப் பிறந்ததா அல்லது ஏதேனும் காயம்பட்டு ஒரு காலை இழந்ததா என்று தெளிவாகத் தெரியவில்லை என்றும் திரு கான் சொன்னார்.

வெள்ளை உள்ளான் பறவைகள் வலசையை முடித்துக்கொண்டு, மார்ச் மாதத்தில் ஆர்க்டிக் நோக்கித் திரும்பும்.

குறிப்புச் சொற்கள்