பாரிஸ்: பிரான்சின் மலூஸ் நகரில் நிகழ்ந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் பலியானார்.
அத்தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் மூவர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் தொடர்பில் அல்ஜீரியாவைச் சேர்ந்த 37 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டார். ‘அல்லாஹு அக்பர்’ என்று அவர் கத்தியதால் அதனைப் பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவலர்கள் இருவருக்கு அந்த அல்ஜீரியர் கடுமையான காயம் விளைவித்தார். அவர்களில் ஒருவரின் கழுத்திலும் இன்னொருவரின் மார்பிலும் அந்த ஆடவர் கத்தியால் குத்தினார்.
அதனைத் தடுக்க முயன்ற 69 வயது போர்ச்சுகீசிய ஆடவரையும் அவர் குத்திக் கொன்றார்.
பயங்கரவாதக் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் அந்த ஆடவர் நாடுகடத்தப்பட இருந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் கூறினார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு ஆதரவாக சனிக்கிழமை (பிப்ரவரி 22) பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இத்தாக்குதல் நிகழ்ந்தது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் காவல்துறையினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், இச்சம்பவம் இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் என்பதில் சந்தேகமே இல்லை என்று பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் மாண்டவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக்கொண்ட அவர், பிரெஞ்சு மண்ணில் பயங்கரவாதத்தை அடியோடு வேரறுக்கும் பணியைத் தொடர்வதில் தாமும் தமது அரசாங்கமும் உறுதியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பிரெஞ்சு உள்துறை அமைச்சர் சனிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.