தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பானில் கரடி தாக்கி ஒருவர் மரணம்

1 mins read
a2d4e263-3070-4aa7-ab49-4b22cbd8c4ff
மக்கள்தொகை குறைவதாலும் பருவநிலை மாற்றத்தாலும் ஜப்பானில் அண்மைக் காலமாக அரியவகைக் கரடிகள் அதிக எண்ணிக்கையில் தென்படுகின்றன. - படம்: அன்ஸ்ப்ளா‌‌ஷ்

தோக்கியோ: ஜப்பானின் வட பகுதியில் ஒரு கரடி தாக்கியதில் பெண் மாண்டார். இன்னொருவரைக் காணவில்லை என்று காவல்துறையும் உள்நாட்டு ஊடகமும் சனிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்தன. அந்தப் பெண், காளான்களைப் பறித்துக்கொண்டிருந்தபோது கரடி தாக்கியதாகக் கூறப்பட்டது.

அண்மை ஆண்டுகளில் குடியிருப்பு வட்டாரங்களில்கூட கூடுதலான அரியவகைக் கரடிகள் தென்படுகின்றன. அதிகமான கரடிகள் நாட்டுக்குள் சுற்றித்திரிவதற்கு மக்கள்தொகை குறைவதும் பருவநிலை மாறுவதும் காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.

70 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் உட்பட நால்வர் மலைப்பகுதியொன்றில் காளான்களைப் பறித்துக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் வடக்கே உள்ள மியாகி வட்டாரக் காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) ஏஎஃப்பி ஊடகத்திடம் அதனைத் தெரிவித்தார்.

பெண் மாண்டதற்கான காரணத்தைக் கண்டறிய காவல்துறையினர் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் சொன்னார். பெண்ணைக் கரடி தாக்கியதாகக் காவல்துறையிடம் குழுவொன்று கூறியது. பெண்ணின் உடலில் ஏற்பட்ட காயங்களின் அடிப்படையில் அவரை விலங்கு தாக்கியிருக்கவேண்டும் என்று காவல்துறை நம்புவதாக அரசாங்க ஊடகமான என்எச்கே (NHK) தெரிவித்தது.

மற்றொரு நடப்பில், நகானோ வட்டாரத்தில் கூர்மையான நகக் கீரல்களுடன் 78 வயது ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அசாஹி ‌ஷிம்புன் நாளேடு கூறியது. கரடி தாக்கி அவர் மாண்டதாகக் காவல்துறை நம்புகிறது.

இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் நிலவரப்படி, ஜப்பானில் கரடிகள் கடித்ததால் 69 பேர் காயமுற்றனர். அவர்களில் ஐவர் ஏப்ரலுக்கும் ஆகஸ்ட்டுக்கும் இடையில் மாண்டதாக என்எச்கே குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்