பேங்காக்: தாய்லாந்துத் தலைநகரில் பழைய கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்ததில் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவத்தில் ஏராளமான கார்கள் சேதமடைந்ததாக அவசரநிலைப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.
தலாட் நொய் துணை மாவட்டத்தில் உள்ள பௌத்த ஆலயத்தின் அருகில் உள்ள கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்ததாக ‘ரமா 100’ வானொலி கூறியது.
தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கிய ஊழியர்களை மீட்டனர்.
அந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்திலிருந்து கீழே விழுந்த கான்கிரீட் கல் ஒன்று எதிர்பாராதவிதமாக ஆடவர் ஒருவர்மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் மாண்டார்.
ஆயினும், அவரைப் பற்றிய அடையாளங்கள் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
கட்டட இடிபாடுகளை அகற்றி, உயிரிழந்த ஆடவரின் சடலம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அறிய அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதேவேளையில், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தக் கட்டடம் சுமார் 100 ஆண்டுகள் பழமையான கடை வளாகம் என்றும், அதில் காகித விற்பனை, மின்சாரப் பொருள்கள், தேநீர்க் கடைகள் மற்றும் ஒரு பயண முகமை உள்ளிட்ட பல கடைகள் இயங்கி வந்தன என்றும் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தன.
அண்மையில், கட்டுமானப் பூச்சில் இருந்து சிறு சிறு துண்டுகள் விழுந்ததாகவும், ஆனால் இந்த இடிபாட்டின் தீவிரம் எதிர்பாராதது என்றும் ஒரு கடை உரிமையாளர் கூறினார்.

