கொலோராடோ: ஃபிரண்டியர் விமான விபத்தில் ஓடுதளத்தில் இருந்த பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
டென்வர் அனைத்துலக விமான நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சலசுக்குப் புறப்படவிருந்து ஃபிரண்டியர் விமானம், ஓடுபாதையில் இருந்த பாதசாரிமீது மோதியதாக டென்வர் விமான நிலைய அறிக்கை தெரிவித்தது.
அந்தப் பாதசாரி யார் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர், வேலியைத் தாண்டி இரண்டு நிமிடங்களில் ஓடுபாதையில் ஓடியதாகக் கூறப்படுகிறது.
அவர், விமான நிலைய ஊழியர் அல்லர் என்று அறிக்கை குறிப்பிட்டது.
இந்தச் சம்பவத்தால் 224 பயணிகளும் ஏழு விமானச் சிப்பந்திகளும் இருந்த ஏர்பஸ் ஏ321 விமானத்தில் இயந்திர அறையில் தீப்பொறி ஏற்பட்டு விமானத்திற்குள் புகை பரவியது. விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதில் 12 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. ஐவர் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக ஃபிரண்டியர் விமான நிறுவனம் கூறியுள்ளது. இதன் தொடர்பில் விமான நிலையம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து தகவல்களைத் திரட்டி வருவதாகவும் அது சொன்னது.
சம்பவத்துக்குப் பிறகு உள்ளூர் நேரப்படி காலை 10.55 மணியளவில் ஓடுபாதை வழக்க நிலைக்குத் திரும்பியது. இந்த நிலையில் பாதசாரி தாண்டிச் சென்ற வேலியை ஆராய்ந்ததில் அது சேதமடையாமல் இருந்தது கண்டறியப்பட்டதாக விமான நிறுவனம் கூறியது.

