கோலாலம்பூர்: ஏறத்தாழ 15.6 விழுக்காடு மலேசியர்களுக்கு, அதாவது ஆறு மலேசியரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அந்த ‘தேசிய சுகாதார, நோய்த்தொற்று ஆய்வின்’ விவரங்களை மலேசிய சுகாதார அமைச்சின் நோய்க் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் டாக்டர் நூரார்யானா ஹசன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 18 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இளம் மலேசியர்களில் 84 விழுக்காட்டினர், அதாவது ஐந்தில் இருவர், தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது பற்றி அறியாமல் இருந்தது ஆய்வில் தெரியவந்ததாகவும் அது ஒரு கவலைக்குரிய அம்சம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்கிய மலேசிய நீரிழிவு விழிப்புணர்வு மாநாட்டில் டாக்டர் நூரார்யானாவின் உரை வாசிக்கப்பட்டது.
நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகளை தொடக்கநிலையிலேயே மேற்கொள்வதன் மூலம் இளவயது மரணங்களைத் தவிர்க்கலாம் என்று அவர் வலியுறுத்தினார்.
“அதிகமான மலேசியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருவதால், அதுபற்றி முன்கூட்டியே அறிந்து, பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் மேற்கொள்வதன் மூலம் நீரிழிவால் ஏற்படும் உடல்நலச் சிக்கல்களைத் தவிர்க்கலாம் அல்லது தள்ளிப்போடலாம்,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் மாநாடு, நீரிழிவு நோய்க்கு எதிரான முயற்சிகளை ஒருங்கிணைக்கவும் அது தொடர்பான தகவல் பரிமாற்றத்தை வலுவாக்கவும் எண்ணம் கொண்டுள்ளது.