உலகின் ஆக வயதான சிங்கங்களில் ஒன்று கால்நடைப் பராமரிப்பாளர் ஒருவரால் கொல்லப்பட்டதாக கென்ய நாட்டு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லூன்கிட்டோ என்ற அந்த 19 வயது ஆண் சிங்கம் ஒல்கெலுன்யெட் என்ற கிராமத்தில் மே 10ஆம் தேதி இரவு கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிங்கம் உணவு தேடி கால்நடைகள் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது அது கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
காடுகளில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் விலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மக்கள் வாழும் இடங்களுக்குச் செல்கின்றன, அதனால் அவைத் தாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி ஆப்ரிக்க வட்டாரத்திலேயே ஆக வயதான சிங்கமாக லூன்கிட்டோ இருந்ததாக சிங்கங்களைக் காக்கும் தொண்டூழியர்கள் கூறினர்.
பொதுவாக காடுகளில் வாழும் சிங்கங்களின் அதிகபட்ச வயது 13ஆக இருக்கும். இருப்பினும் கூண்டுகளில் அடைக்கப்படும் சிங்கங்கள் கூடுதலாக உயிர் வாழும்.
உலகில் உள்ள சிங்கங்களில் பெரும்பாலானவை ஆப்ரிக்காவில் உள்ளன. சில சிங்கங்கள் இந்தியாவில் உள்ளன.


