டெல் அவிவ்: இஸ்ரேலும் ஈரானும் சனிக்கிழமை (ஜூன் 14) அதிகாலை நிலவரப்படி, ஆகாயத் தாக்குதல்களைத் தொடர்கின்றன.
ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை ஆகப் பெரிய தாக்குதலை மேற்கொண்டது. ஈரானின் ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள், ராணுவத் தலங்கள், அணுசக்தித் தலங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அதையடுத்து இருதரப்பும் பதிலுக்குப் பதில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலம் நகரங்களில் விடியற்காலையில் ஆகாயத் தாக்குதல் குறித்த எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டன.
குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடம் தேடி விரைந்த நிலையில், ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்கும் வண்ணம் ஆகாயத் தற்காப்புக் கட்டமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
ஈரான் பல ஏவுகணைகளைப் பாய்ச்சியதாகவும் அவற்றில் சில இடைமறிக்கப்பட்டதாகவும் அது கூறியது. நாட்டின் பல்வேறு பகுதிகள் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளான வேளையில் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது. இருப்பினும் உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை.
இவ்வேளையில், ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் சில வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இரு ஏவுகணைகள் தாக்கியதாக ‘த ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் கூறுகிறது. அங்குத் தீப்பிழம்பைக் காண முடிவதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
டெஹ்ரான் மூன்றாவது முறையாக இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதலை மேற்கொண்டிருப்பதாகவும் ‘த ஃபார்ஸ்’ தகவல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மக்கள் அதிகம் வசிக்கும் வட்டாரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானது. டெல் அவிவ் நகரில் ஜூன் 13ஆம் தேதி இரவு 34 பேர் காயமுற்றதாக இஸ்ரேலிய மருத்துவ உதவி வாகனச் சேவைப் பிரிவு தெரிவித்தது. பின்னர், அவர்களில் ஒருவர் மாண்டுவிட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

