துபாய்/ஜெருசலம்/வாஷிங்டன்: மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழலை மேலும் மோசமாக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) ஈரான்மீது இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தது.
இம்முறை ஈரானின் ஏவுகணை, வான்வெளிப் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிவைத்து அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சநிலைத் தலைவர் அயத்துல்லா அல் காமெனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானியர்கள் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளனர். அந்த நிகழ்வு மத்திய கிழக்கு வட்டாரத்தையும் நிலைகுலையச் செய்யலாம் என அஞ்சப்படுகிறது.
எதிராளியின் தாக்குதலில் 86 வயது அல் காமெனி கொல்லப்பட்டதை ஈரானிய அரசு ஊடகமும் உறுதிசெய்தது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில், சனிக்கிழமை ஈரானும் நூற்றுக்கணக்கான எறிகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் ஏவி தாக்குதல் நடத்தியது. அந்த வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட அமெரிக்கப் படைகள், இஸ்ரேல், அமெரிக்க ஆதரவு அரபு நாடுகளின் நகரங்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, அவ்வட்டாரத்தில் அதிக அளவில் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஈரான் தாக்குதலால் தனது தரப்பில் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்தது.
ஈரான் தாக்குதலில் துபாய் அனைத்துலக விமான நிலையமும் புகழ்பெற்ற புர்ஜ் அல் அரபு ஹோட்டலும் சேதமடைந்தன; நால்வர் காயமுற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, ஹோர்மஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. அவ்வழியாக உலகில் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய்ப் போக்குவரத்து இடம்பெற்று வந்ததால் எரிபொருள் விலை ஏறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உறவினர்களும் மாண்டனர்
முன்னதாக, சனிக்கிழமை தமது உயர்மட்ட அதிகாரிகளுடன் அல் காமெனி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது அமெரிக்காவும் இஸ்ரேலும் அவரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக விவரமறிந்த அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்தப்பட்டபோது அல் காமெனி தமது அலுவலகத்தில் இருந்ததாக ஈரானிய அரசு ஊடகம் கூறியது. அத்தாக்குதலில் அவருடைய மகள், மருமகள், மருமகன், பேரக்குழந்தை ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, இடைக்காலத் தலைமைத்துவ மனறம் விரைவில் அமைக்கப்படும் என்றும் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்வரை அது பொறுப்பில் இருக்கும் என்றும் ஈரானின் உச்சநிலை தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் அலி லரிஜனி தெரிவித்துள்ளார்.
துபாய், தோஹாவில் வெடிப்புச் சத்தம்
இதனிடையே, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் துபாய், கத்தாரின் தோஹா, பஹ்ரேனின் மனாமா ஆகிய மத்திய கிழக்கு நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது.
சண்டை மேலும் பல பகுதிகளுக்குப் பரவலாம் என்ற அச்சத்தை இந்தத் தாக்குதல்கள் ஏற்படுத்தியுள்ளன.

