சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் அலட்சியப் போக்கு தொடர்கிறது.
அலட்சியமான நடவடிக்கைகள் பலரின் உயிருக்கு ஆபத்தாகலாம் என்பதால் தற்போது அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இரண்டு விமானங்கள் ஒரே ஓடுபாதை நோக்கிச் செல்ல வழிகாட்டப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரே மாதத்தில் அத்தகைய நான்கு சம்பவங்கள் முறை பதிவாகியுள்ளன.
இதையடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) தகவல் வெளியிட்டுள்ளது.
“ஆகஸ்ட் 18ஆம் தேதி கோல்ட் கோஸ்ட் செல்லத் தயாராக இருந்த விமானம், மெல்பர்னிலிருந்து வந்து சேர்ந்த குவாண்டாஸ் போயிங் 737 விமானத்தின்மீது மோதாமல் இருக்கத் திடீரென வேகக் கட்டுப்பாட்டுக் கருவியை அழுத்தியது,” என்று பாதுகாப்பு அமைப்பு அறிக்கையில் குறிப்பிட்டது.
விமானம் திரும்புவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட அதே பாதையில் மற்றொரு விமானமும் தொடர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டதை அமைப்பு சுட்டிக்காட்டியது.
உடனடியாக மோதல் ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அமைப்பு கடந்த சில நாள்களில் இந்த விமான நிலையத்தில் இதேபோன்று நடந்த மற்ற மூன்று சம்பவங்களுக்கும் இதற்கும் ஏதேனும் பொதுவான காரணங்கள் உள்ளனவா என்பதைப் புரிந்துகொள்ள விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
“விசாரணையின் ஆதாரங்களைச் சேகரிக்கும் கட்டத்தில், சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், விமானப் பணியாளர்களிடம் நேர்காணல் நடத்துவது, பதிவான தரவுகளைப் பெற்று ஆய்வு செய்வது ஆகியவை அடங்கும்,” என்று பாதுகாப்பு அமைப்பு கூறியது.
இதற்கான முதற்கட்ட அறிக்கை ஆறு முதல் எட்டு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


