இணையவழி மோசடி: மலேசியாவில் வெளிநாட்டினர் 13 பேர் கைது

இணையவழி மோசடி: மலேசியாவில் வெளிநாட்டினர் 13 பேர் கைது

படம்: பிக்சாபே

28 Sep 2026 - 7:13 pm

1 mins read

பெட்டாலிங் ஜெயா: ஜப்பான், சீனாவைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் கும்பலால் நடத்தப்பட்டுவந்த இணையவழி மோசடி அழைப்பு நிலையத்தை மலேசியாவின் பேராக் மாநிலக் காவல்துறை அதிரடியாக முறியடித்துள்ளது.

பேராக்கில் உள்ள கம்பார் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடமைப்பு வளாகத்தில் மூன்று குடியிருப்புப் பிரிவுகளில், செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்டோர் 20 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் ஜப்பானைச் சேர்ந்த ஒன்பது பேரும் சீனாவைச் சேர்ந்த ஆடவர் நால்வரும் அடங்குவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தீவிரமாக இயங்கிவந்த அந்தச் சட்டவிரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஜப்பானியக் காவல்துறை அதிகாரிகளைப் போல நடித்து, ஜப்பானில் உள்ள சிலரை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்டு வந்தனர்.

சோதனை நடத்தப்பட்ட அந்த மூன்று வளாகங்களும் மோசடி நடவடிக்கைகளுக்கான அழைப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் சிலர் மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன்பு கம்போடியாவில் தங்கி இதே போன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் பின்னர் சுற்றுப்பயணிகளுக்கான விசாவைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்து தங்களது சட்டவிரோதச் செயல்களைத் தொடர்ந்ததும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதிரடிச் சோதனையின்போது இரண்டு மடிக்கணினிகள், 18 கைப்பேசிகள், இரண்டு ஐபேட் கைக்கணிகள் போன்ற சாதனங்களுடன் ஜப்பானியக் காவல்துறையினர் பயன்படுத்துவதைப் போன்ற மூன்று அடையாளக் குறிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇணையம்மோசடிபேராக்