இணையவழி மோசடி: 2023 முதல் மலேசியாவில் 45,000 பேர் கைது

இணையவழி மோசடி: 2023 முதல் மலேசியாவில் 45,000 பேர் கைது

2 mins read
f38cecd3-3fe2-4c58-becf-341645977111
மோசடிப் பேர்வழிகளிடமிருந்து  8.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான குற்றவியல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. - மாதிரிப்படம்: பிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவில் 2023ஆம் ஆண்டுமுதல் இணையவழி மோசடி வழக்குகள் தொடர்பாகக் கிட்டத்தட்ட 45,000 சந்தேகப் பேர்வழிகள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 8.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான குற்றவியல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று மலேசியாவின் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஜெமின் எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துவழி பதிலில், “2023 முதல் 2026 மே மாதம்வரை, காதல் மோசடி, மின்வணிக மோசடி, முதலீட்டு மோசடி போன்ற இணையவழி மோசடிகள் தொடர்பாக 165,501 வழக்குகளை வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை விசாரித்துள்ளது. அவற்றில் 60,955 வழக்குகளில் தீர்வுகாணப்பட்டுவிட்டன; 24,681 வழக்குகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இணையவழி மோசடி நிலையங்களைக் குறிவைத்து நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட 43,343 சிறப்பு நடவடிக்கைகளின்மூலம் 44,990 பேர் கைதுசெய்யப்பட்டனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர்களிடமிருந்து 2025ஆம் ஆண்டில் 6.66 மில்லியன் ரிங்கிட், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மே வரை 2.07 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம், வாகனங்கள், மின்னணுக் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இணைய மோசடிக் கும்பல்களுக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும் இடையே உள்ள தொடர்பை உறுதிப்படுத்திய அமைச்சர், “மலேசியாவில் இணையவழி கட்டாய உழைப்புச் சுரண்டல் நிலவுவதை காவல்துறை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் கூட்டுரிமைக் குடியிருப்புகளில் அடைக்கப்பட்டு, கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உடல் சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு இடையில் வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்,” என்று விளக்கமளித்தார்.

அத்தகைய மோசடி நிலையங்களில் நடந்த உழைப்புச் சுரண்டல்கள் தொடர்பில், மோசடிக் கும்பல்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என 54 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 28 பேர் மலேசியர்கள்.

மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்ட 178 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் 62 பேர் வெளிநாட்டினர். அந்தந்த நாடுகளின் தூதரகங்களின் உதவியுடன் அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

மலேசியாவில் இணையவழி மோசடிகளை ஒழிக்கவும், அவை ஆட்கடத்தலுக்கு வழிவகுப்பதைத் தடுக்கவும் தேசிய பாதுகாப்புச் கொள்கையின்படி ஒருங்கிணைந்த செயலாக்க முயற்சிகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்று அமைச்சர் சைஃபுதீன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்