இணையவழி மோசடி: கம்போடியாவில் வெளிநாட்டவர் 107 பேர் தடுத்துவைப்பு

இணையவழி மோசடி: கம்போடியாவில் வெளிநாட்டவர் 107 பேர் தடுத்துவைப்பு

1 mins read
5a97576b-a0e3-4db9-b82d-263b1db149a3
இணையவழி மோசடிகள் இடம்பெற்ற சூதாட்டக்கூட வளாகம். - படம்: ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

நோம்பென்: கம்போடியாவில் இணையவழி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, வெளிநாட்டினர் 107 பேர் பிடிபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, சுவே ரியெங் மாநிலத்தில் அவர்கள் செயல்பட்டுவந்த சூதாட்டக்கூடத்தின் உரிமத்தை அதிகாரிகள் மீட்டுக்கொண்டனர்.

அந்த மோசடி நிலையத்தை ஏப்ரல் 1ஆம் தேதி கண்டுபிடித்ததை கம்போடிய வணிகப் பந்தய நிர்வாக ஆணையம் உறுதிப்படுத்தியது.

அந்தச் சூதாட்டக்கூட வளாகத்தில் சோதனை மேற்கொண்டபோது இணையவழி மோசடி தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

காவல்துறையினருடன் இணைந்து அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

“மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கருவிகளையும் பொருள்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நான்கு நாடுகளைச் சேர்ந்த 107 பேர் பிடிபட்டனர். அவர்களில் 26 பேர் பெண்கள். சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உரிய அரசாங்க அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்,” என்று ஆணையம் தெரிவித்தது.

அண்மை ஆண்டுகளாக கம்போடியாவில் இருந்தபடி இணையவழி மோசடிகள் அதிக அளவில் இடம்பெற்று வந்தன. இதனையடுத்து, வட்டார நாடுகளும் உலக நாடுகளும் கவலை தெரிவித்தன.

கம்போடியாவில் இருந்தபடி மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடி நடவடிக்கைகளை அறவே ஒழிக்க ‘கமாண்ட் நம்பர் 01’ என்ற பெயரில் அந்நாடு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்