மலேசியாவில் இணைய மோசடிச் சம்பவங்கள் 87% அதிகரிப்பு: ஐஜிபி

மலேசியாவில் இணைய மோசடிச் சம்பவங்கள் 87% அதிகரிப்பு: ஐஜிபி

2 mins read
bc1f6224-097c-4550-a608-3373146ec75f
2024ஆம் ஆண்டு பதிவானவற்றுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது. - படம்: பிட்லிஃப்ட்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் இணைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற அண்டு 87 விழுக்காடு அதிகரித்ததாக அந்நாட்டு காவல்துறை ஐஜிபி முகம்மது காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டு 66,204 இணைய மோசடிச் சம்பவங்கள் இடம்பெற்றதாக அவர் கூறினார். அமலாக்க நடவடிக்கைகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டுவரும்போதும் இணையக் குற்றவாளிகளால் தொடர்ந்து ஏற்படும் அச்சுறுத்தல்களை இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

பறிபோன தொகை கணிசமாக அதிகரிப்பு

“அதிகமாகப் பணம் பறிக்கப்பட்டுவருவதோடு திடுக்கிடும் அளவில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் சென்ற ஆண்டு 2.97 பில்லியன் ரிங்கிட் (941.03 மில்லியன் வெள்ளி) தொகையை இழந்தனர். அத்தொகை, 2024ல் பறிபோனதைவிட 1.40 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்,” என்று திங்கட்கிழமை (ஜூன் 15) மோசடித் தடுப்புத் திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்கு முன்பு திரு முகம்மது காலிட் கூறினார்.

தொலைபேசி அழைப்புகளின்வழி மேற்கொள்ளப்படும் மோசடிகளின் எண்ணிக்கைதான் ஆக அதிகமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். அத்தகைய 28,388 மோசடிச் சம்பவங்கள் பதிவாயின.

“அதேவேளை, முதலீட்டுத் திட்டங்களில் ஈடுபடுத்துவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட போலி முதலீட்டு மோசடிகளில்தான் ஆக அதிகமாக 1.47 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது,” என்றும் திரு முகம்மது காலிட் குறிப்பிட்டார்.

நவீனமாகிவரும் மோசடிக் கும்பல்கள்

மோசடிக் கும்பல்கள் தொடர்ந்து நவீனமயமாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப அம்சங்கள், மின்னிலக்கத் தளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவை, சந்தேகம் எழாதோரைக் குறிவைப்பதாக அவர் சொன்னார்.

“இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு சம்பவத்துக்குப் பின்னாலும் ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தினர் நிதிச் சவாலையும் மனவுளைச்சலையும் எதிர்நோக்குகின்றனர்,” என்று திரு காலிட் சுட்டினார்.

மின்னிலக்கச் சேவைகள், இணையப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றின் அதிவேக வளர்ச்சி ஏமாற்றுக்காரர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளதாக அவர் கூறினார். அதனால் இணையக் குற்றங்களைத் தடுப்பதில் அதிகாரிகள், நிதி நிலையங்கள், பொதுமக்கள் ஆகிய தரப்பினர் ஒன்றாகச் செயல்படுவது அவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஏமாற்றுமலேசியாஇணையக் குற்றம்நடவடிக்கைபணம்