கோலாலம்பூர்: இணைய மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 837 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் முகம்மது ஹசான் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை வெளியிட்ட அவர், இந்தப் புள்ளிவிவரம் இணையம்வழி ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுபவரை மட்டும்தான் உள்ளடக்குவதாகக் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கக்கூடிய மற்ற மலேசியர்கள் இவர்களில் அடங்கமாட்டார்கள் என்று அவர் சொன்னார்.
“நவம்பர் எட்டாம் தேதி நிலவரப்படி இணைய மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 837 மலேசியர்கள் கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வகை குற்றம் மட்டுமே. மற்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இது, எங்களுக்கு மிகுந்த கவலை தரும் ஒன்று,” என திரு முகம்மது ஹசான் மலேசிய நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (நவம்பர் 10) கூறினார்.
வெளிநாடுகளில் இத்தனை பேர் தடுத்துவைக்கப்பட்டிருப்பது உலக மேடையில் மலேசியாவின் பெயரைக் கெடுக்கக்கூடும் என்று அவர் சுட்டினார்.
இணைய மோசடிகள் தொடர்பில் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 837 மலேசியர்களில் 765 பேர் சீன இனத்தவர், 34 பேர் மலாய் இனத்தவர், 33 பேர் இந்திய இனத்தவர். இதர ஐவர் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
பெரும்பாலானோர் சீனாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அங்கு 545 மலேசியர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 505 ஆண்களும் 40 பெண்களும் அடங்குவர்.
162 பேர் சிங்கப்பூரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 148 பேர் பெண்கள், 14 பேர் ஆண்கள்.
மற்றவர்கள் ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பாதுகாப்பாக இருக்குமாறும் உள்ளூர் சட்டங்களை நன்கு அறிந்துகொள்ளுமாறும் திரு ஹசான், வெளிநாடு செல்லும் மலேசியர்களைக் கேட்டுக்கொண்டார்.
“என்றும் விழிப்புடன் இருக்குமாறும் சம்பந்தப்பட்ட நாட்டின் சட்டங்களைப் புரிந்து வைத்திருக்குமாறும் வெளிநாடுகளுக்குப் போகும் மலேசியர்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்குகிறோம். நமது குடிமக்கள், மலேசியாவைப் பிரதிநிதிக்கும் பொறுப்புமிக்க பயணிகளாக இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

