ஜோகூர் பாரு: நடந்து முடிந்த மலேசியாவின் ஜோகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி மகத்தான வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரான ஒன் ஹஃபிஸ் காஸி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரண்டாவது முறையாக அந்த மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார்.
மச்சாப் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி ஜோகூர் மன்னர் இஸ்மாயில் முன்னிலையில் பதவியேற்றார். இரண்டாவது தவணைக்கான நியமனச் சான்றிதழை அதிகாரபூர்வமாக அவர் பெற்றுக்கொண்டார்.
16வது ஜோகூர் மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 56 மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி 48 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இந்த நியமனம் அமைந்துள்ளது.
முன்னதாக, ஜோகூர் முதலமைச்சரின் அதிகாரபூர்வ இல்லமான சௌஜானாவிலிருந்து ஓன் ஹஃபிஸ் பயணித்த அதிகாரபூர்வ வாகனம் பிற்பகல் மணி 3.35 அளவில் புறப்பட்டுச் சென்றது காணப்பட்டது.
ஜோகூர் முதலமைச்சர் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அவர் புக்கிட் செரின் அரண்மனையைச் சென்றடைந்தார்.
சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெற்ற பதவியேற்புக்குப் பின்னர், பிற்பகல் 4.50 மணியளவில் ஓன் ஹஃபிஸ் அரண்மனையை விட்டு புறப்பட்டார்.
பதவியேற்பு விழாவை ஒட்டி ஜோகூர் அரண்மனை நுழைவாயிலுக்கு அருகே பாதுகாப்புப் படையினர், அரசாங்க அதிகாரிகள், ஊடகத் துறையினர் ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தேசிய முன்னணிக் கூட்டணியின் தலைவர் டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, ஒன் ஹஃபீஸ் காசி இருவரையும் சந்தித்தார்.
“நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பல்லாயிரக்கணக்கான ஜோகூர் மக்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிவேன். மாநிலத்தின் நன்மைக்காக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இறைவனின் ஆசியைப் பெற அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்,” என்று அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாநில மக்களின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் ஜோகூர் அரசு வெற்றிகரமாக அடையும் என்று ஒன் ஹஃபீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

