எண்ணெய் உற்பத்தியை மீண்டும் உயர்த்த ‘ஓபெக் பிளஸ்’ ஒப்புதல்

எண்ணெய் உற்பத்தியை மீண்டும் உயர்த்த ‘ஓபெக் பிளஸ்’ ஒப்புதல்

2 mins read
138ffef5-52b2-4681-ac29-6d56aab86be2
ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் வரை, உற்பத்தி உயர்வு குறித்த  ‘ஒபெக் பிளஸ்’ அமைப்பின் அறிவிப்பு, பெயரளவில்தான் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

உலகின் பெரும்பகுதி எண்ணெய்யை விற்கும் நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பான ஓபெக் பிளஸ் (OPEC+), எண்ணெய் உற்பத்தியைச் சிறிதளவு உயர்த்தும் எனத் தகவல்கள் கூறுகின்றன.

ஜூன் மாதத்தின் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 188,000 பீப்பாய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய இந்நாடுகள் தற்போதைக்கு உறுதியளித்துள்ளன.

இந்த அமைப்பு உற்பத்தியை உயர்த்துவதாக அறிவிப்பது இது மூன்றாவது முறையாகும்.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு எண்ணெய் விநியோகத்தை உயர்த்த இந்தக் குழுமம் தயாராக இருப்பதை உணர்த்துவதே இந்நடவடிக்கையின் நோக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏப்ரல் 28ல் ஐக்கிய அரபுச் சிற்றரசு இந்தக் குழுமத்திலிருந்து வெளியேறினாலும், உற்பத்திக்கான தனது குறிக்கோளை நிறைவேற்றக் குழுமம், தொடர்ந்து செயல்படுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஞாயிற்றுக்கிழமை (மே 30) கூட்டத்தில் சவூதி அரேபியா, ஈராக், குவைத், அல்ஜீரியா, கஸகஸ்தான், ரஷ்யா, ஓமான் ஆகிய ஏழு நாடுகள் பங்கேற்றன.

ஐக்கிய அரபுச் சிற்றரசின் வெளியேற்றத்தையடுத்து, ஓபெக் பிளஸ் அமைப்பில் ஈரான் உள்ளிட்ட 21 உறுப்பு நாடுகள் உள்ளன. ஆயினும்,  இந்த ஏழு நாடுகளுடன் ஐக்கிய அரபுச் சிற்றரசு மட்டுமே மாதாந்திர உற்பத்தி முடிவுகளில் ஈடுபட்டு வந்தன.

பிப்ரவரி 28ல் தொடங்கிய ஈரான் போர், ஹோர்முஸ் நீரிணையின் மூடல் ஆகியவற்றின் காரணமாக, ஓபெக் பிளஸ் உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, ஈராக், குவைத், ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகியவற்றின் ஏற்றுமதி கடுமையாக முடங்கியுள்ளது. 

 ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் வரை, இந்த உற்பத்தி உயர்வு என்பது பெயரளவில்தான் இருக்கும். 

நீரிணை திறக்கப்பட்டாலும், எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை ஆகலாம் என்று வளைகுடா, உலகளாவிய எண்ணெய் வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
கப்பல் எண்ணெய்ஈரான்வளைகுடாஉற்பத்தி